தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ‘மெக்டோனல்ட்ஸ்’ தீபாவளி

2 mins read
73784982-39b7-4c52-b7f5-831a19f61a0d
கொவிட்-19 தொற்றுகாலத்தின்போது வெளியே சென்று உணவு வாங்க இயலாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு வழங்கிய ‘மெக்டானல்ட்ஸ்’ சிங்கப்பூர். - படம்: ‘மெக்டோனல்ட்ஸ்’ சிங்கப்பூர்
multi-img1 of 2

தீபாவளியை ‘மெக்டோனல்ட்ஸ்’ உணவகத்தில் கொண்டாடுவோம் எனக் கனவிலும் நினைத்திராத வெளிநாட்டு ஊழியர்களுக்குக் காத்திருந்தது ஓர் இன்ப அதிர்ச்சி.

‘மெக்டோனல்ட்ஸ்’, ‘மைக்ரண்ட் X மி’ இரண்டும் நவம்பர் 9ஆம் தேதி இணைந்து முதன்முறையாக வழங்கிய நிகழ்ச்சியில் தாம் விரும்பிய ‘மெக்டோனல்ட்ஸ்’ உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர் விபத்துகளால் தற்காலிகமாக வேலை செய்யாதிருக்கும் 25 வெளிநாட்டு ஊழியர்கள்.

தாங்கள் தயாரித்த தீபங்களை ரசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
தாங்கள் தயாரித்த தீபங்களை ரசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ‘மெக்டோனல்ட்ஸ்’ சிங்கப்பூர்

இவர்கள் அனைவரும் ரட்சணிய சேனை தற்காலிக இருப்பிடத்தின் பங்காளியான சிங்கப்பூர் விபத்து உதவி நிலையத்தில் வாரந்தோறும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காப்புறுதி மூலம் கிடைக்கவுள்ள தொகைக்காகக் காத்திருக்கும் வேளையில் மனச்சோர்வடையாமல் இருக்க இவர்கள் ‘மைக்ரண்ட் X மி’, ரட்சணிய சேனை தற்காலிக இருப்பிடம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுவருகின்றனர்.

சிலர் கைத்தடியோடு வந்தனர், சிலர் நொண்டியவாறு நடந்தனர். ஆனால், ‘மெக்டோனல்ட்ஸ்’ மீதான பிரியத்தால் ஒரு மணி நேரம் முன்னதாகவே பலரும் வந்துவிட்டனர்.

அவர்களுடன் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர்கள் ஐவர் உரையாடி மகிழ்ந்தனர். இளையர்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கிடையே பந்தங்களை ஏற்படுத்த ‘மைக்ரண்ட் X மி’ நடத்தும் நிகழ்ச்சிகளில் இவர்கள் அடிக்கடி பங்குபெறுகின்றனர்.

“நம் வெளிநாட்டு ஊழியர்களுடன் தீபாவளி இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினோம்,” என்றார் ‘மெக்டோனல்ட்ஸ்’ சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் பெஞ்சமின் போ.

“நம் இளையர்கள் வெளிநாட்டு ஊழியர்களை மேலும் புரிந்துகொள்ள வாய்ப்பளித்துள்ளது இந்நிகழ்ச்சி,” என்றார் ‘மைக்ரண்ட் X மி’ நிர்வாக இயக்குநர் இசேபல் புவா.

இதே நிகழ்ச்சியில், சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வசதிகுறைந்த மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் 3,000 உணவுப் பற்றுச்சீட்டுகளை வழங்குவதாக ‘மெக்டானல்ட்ஸ்’ சிங்கப்பூர் அறிவித்தது.

ரட்சணிய சேனை தற்காலிக இருப்பிடம் ஆதரிக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் சிண்டா ஆதரிக்கும் குடும்பங்களும் இப்பற்றுச்சீட்டுகளைப் பெறுவர்.

தீபாவளியன்று 150 வெளிநாட்டு ஊழியர்களை ரட்சணிய சேனை, பறவைப் பூங்காவுக்கு அழைத்துச் செல்லவிருப்பதாகவும் கூறினார் லெப்டினன்ட் பால் மாணிக்கம்.

குறிப்புச் சொற்கள்