சில உடல் எடைக் குறைப்பு பொருள்களில் உள்ள வேதிப்பொருள் நஞ்சு எனத் தகவல்

1 mins read
034dd28f-2bd2-4cfe-9d0c-0fbb3fc7e75c
சில உடல் எடைக் குறைப்பு பொருள்களின் விற்பனை இப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே

உடல் எடையைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் சில மருந்துப் பொருள்களில் கண்டறியப்பட்ட வேதிப்பொருள், நஞ்சு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அத்தகைய எடைக் குறைப்பு பொருள்களின் விற்பனை இப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர்கள் உட்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட 2,4-டிஎன்பி வேதிப்பொருள், நவம்பர் 1ஆம் தேதி நஞ்சு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சரிபார்ப்பின்போது இது தெரியவந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அறிவியல் ஆணையம், “தொழிற்சாலை வேதிப்பொருளான டிஎன்பி, மனிதர்கள் உட்கொள்வதற்குப் பொருத்தமானதன்று. சிங்கப்பூரில் அனைத்து சுகாதாரப் பொருள்களிலும் இதற்குத் தடை விதிக்கப்படுகிறது,” என்று கூறியது.

உள்ளூர் இணைய விற்பனைத் தளங்களில் எடைக் குறைப்பு பொருளாக டிஎன்பி விற்கப்படுவதை தான் கண்டறிந்ததாகச் சொன்ன ஆணையம், விற்பனைத் தளங்களில் இருந்து அதை அகற்ற அவற்றின் நிர்வாகிகளுடன் தான் அணுக்கமாகப் பணியாற்றி வந்துள்ளதாகக் குறிப்பிட்டது.

டிஎன்பி வேதிப்பொருளைக் கொண்டுள்ள பொருள்களை விற்போர் மீது, சிங்கப்பூருக்கு நஞ்சை இறக்குமதி செய்து அதை விநியோகித்ததாக வழக்கு தொடுக்கப்படலாம்.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று ஆணையம் கூறியது.

வெடிமருந்து தயாரிக்க முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட டிஎன்பி, உடல் எடையைக் குறைக்க அதைப் பயன்படுத்தியோரில் சிலருக்கு மரணத்தையும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தியதற்காக 1930களில் அதன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் டிஎன்பி பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்