தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிக்காக பொதுமக்களை வரவேற்ற அதிபர் மாளிகை

2 mins read
2d77890b-61de-4e8f-ac77-74d88eff829e
மழையையும் பொருட்படுத்தாது அதிபரைக் காணவந்த வெளிநாட்டு ஊழியர்களை அதிபர் தர்மனும் அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியும் அன்போடு வரவேற்றனர். - படம்: முத்துகிருஷ்ணன்
multi-img1 of 2

தீபாவளியன்று கிட்டதட்ட 15,000 பொதுமக்கள் அதிபர் மாளிகைக்கு வருகையளித்தனர்.

காலையிலும் மாலையிலும் பொதுமக்களுடன் உரையாடி, அதிபர் தர்மனும் துணைவியார் ஜேன் இத்தோகியும் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

அதிபராகப் பதவியேற்றபின் திரு தர்மன் பொதுமக்களுக்காக நடத்திய முதல் அதிபர் மாளிகை பொது வரவேற்பு நிகழ்ச்சி இதுவே.

மாலை 4 மணியளவில் கனத்த மழை பெய்யத் தொடங்கினாலும் அதிபரைக் காணும் முயற்சியை மக்கள் கைவிடவில்லை

மக்களின் அன்பால் மனம் நெகிழ்ந்த அதிபர் தர்மனும் அவருடைய துணைவியாரும் மக்களுடன் புகைப்படங்கள் எடுத்து, சிரித்துப் பேசி மகிழ்ந்தனர்.

பல இனத்தவர் பங்கேற்பில் மகிழ்ந்த அதிபர்

தீபாவளியன்று இஸ்தானாவில் நாள் முழுதும் பல இனத்தாரைக் கொண்ட குழுக்கள் நிகழ்ச்சிகள் வழங்கியதில் பெருமைப்பட்டார் அதிபர் தர்மன்.

இந்திய, சீனப் பாரம்பரிய இசைக் கலவையை வழங்கிய உள்ளூர் முன்னணி புல்லாங்குழல் கலைஞர்கள் டாக்டர் கானவினோதன் ரத்தினம், டான் சிங் லூனை அவர் பெரிதும் பாராட்டினார்.

சீனப் புல்லாங்குழல் கலைஞர் சிங் லூன், டாக்டர் கானவினோதனிடம் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்று, தேசிய கலைகள் மன்றத்தின் தேசிய இந்திய இசைப் போட்டியில் பரிசும் பெற்றார்.

இந்தியக் குழுக்களின் படைப்புகள் இந்திய சமூகத்தின் வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் சிறப்பையும் சுட்டினார் அதிபர்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றம் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கியது.

அதிபரின் முன்னிலையில் மூன்று மொழிகளில் நிகழ்ச்சி படைத்த சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றம்.
அதிபரின் முன்னிலையில் மூன்று மொழிகளில் நிகழ்ச்சி படைத்த சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றம். - படம்: ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’

“நாட்டின் உறுதிமொழியைச் சொல்வது, தேசிய கீதத்தைப் பாடுவதுடன், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒன்றுகூடி, பிறரது கலாசாரத்தின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வதால்தான் ‘சிங்கப்பூரர்’ எனும் நம் அடையாளம் வலுவடைகிறது,” என்றார் அதிபர் தர்மன்.

அதிபர் மாளிகையின் ரங்கோலிக் கண்காட்சியையும் இஸ்தானாவின் பல இனக் குழுவினரே உருவாக்கினர். 
அதிபர் மாளிகையின் ரங்கோலிக் கண்காட்சியையும் இஸ்தானாவின் பல இனக் குழுவினரே உருவாக்கினர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபரும் துணைவியாரும் வெவ்வேறு அமைப்புகளின் சாவடிகளையும் மக்கள் சூழப் பார்வையிட்டனர். இந்து இளையர் கட்டமைப்பின் ‘இன்பத் தீபாவளி’க் கோலத்தையும் பூவிதழ்கள் கொண்டு அலங்கரித்தனர்.

இக்கோலம் உருப்பெற காலைமுதல் வந்துசென்ற பொதுமக்களும் பங்காற்றினர்.

இந்து இளையர் கட்டமைப்பின் ‘இன்பத் தீபாவளி’ கோலத்தை  அதிபரும் அவருடைய துணைவியாரும் பூவிதழ்கள் கொண்டு அலங்கரித்தனர். இக்கோலம் உருப்பெறுவதில் பொதுமக்களும் பங்காற்றினர்.
இந்து இளையர் கட்டமைப்பின் ‘இன்பத் தீபாவளி’ கோலத்தை அதிபரும் அவருடைய துணைவியாரும் பூவிதழ்கள் கொண்டு அலங்கரித்தனர். இக்கோலம் உருப்பெறுவதில் பொதுமக்களும் பங்காற்றினர். - படம்: ரவி சிங்காரம்

இஸ்தானாவில் தீபாவளி கொண்டாடியதில் மகிழ்ச்சி

தீபாவளியை அதிபர் மாளிகையில் கொண்டாடியதில் பெருமகிழ்ச்சியடைந்தனர் நித்யப்பிரியா-ரமேஷ் குடும்பத்தினர்.

“இந்நன்னாளில் பிள்ளைகளுக்கு இஸ்தானாவைச் சுற்றிக் காண்பிக்க விரும்பினோம்,” என்று அவர்கள் கூறினர்.

“சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக இருந்தும் இதுவரை இஸ்தானாவுக்கு வந்ததில்லை. அருமையான அனுபவமாக இருந்தது,” என்றனர் சகோதரிகளான ஓவியா, நித்யஸ்ரீ.

“பலமுறை இஸ்தானாவுக்கு வரத் திட்டமிட்டபோதும் வர இயலவில்லை. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது,” என்றனர், தங்கள் மகளின் நண்பரின் நிகழ்ச்சியைக் காணவந்த சையது, அனிஸ்.

தீபாவளிக்காக சிங்கப்பூருக்கு வந்திருந்த குடும்பத்தினரை அழைத்துவந்த திருவாட்டி வீரா, “அதிபரைக் கண்டது ஓர் இன்ப ஆச்சரியம்,” என்றார். பச்சைப் பசேல் திறந்தவெளிகளைக் கண்டும் அவர் மகிழ்ந்தார்.

சனிக்கிழமையன்று தம் தீபாவளி முகநூல் பதிவில், அதிபர் தர்மன், கல்விக்கான இநதுக் கடவுள் சரஸ்வதியைப் பல கலாசாரத்தினர் வழிபடுவதாகவும், இந்த வழிபாடு பெளத்த சமயம்வழி இந்தியாவிலிருந்து சீனா, ஜப்பானுக்கு பரவியதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்