சனிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட விபத்தில் காயமுற்ற 36 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் 43 வயது மின்சைக்கிளோட்டியும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
செங்காங்கில் ஆங்கர்வேல் ஸ்திரீட்டை நோக்கிச்செல்லும் ஆங்கர்வேல் லிங்க்கில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து நண்பகல் 12.15 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
இரு ஓட்டுநர்களும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
‘எஸ்ஜி ரோடு விஜிலாண்டே’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, விபத்தைக் காட்டியது.
கறுப்பு நிற உணவு விநியோகப் பையுடன் தலைக்கவசம் அணிந்திருந்த மின்சைக்கிளோட்டி, வலதுபுறம் திரும்பினார். எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டி அவர்மீது மோதினார்.
இதில் அந்த மின்சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அவர் சாலையில் விழுவதற்குள் அவரது தலைக்கவசம் அகன்றது. விபத்துக்குப் பிறகு அவர் எழுந்து நிற்பதைக் காண முடிந்தது.
அவர்மீது மோதிய மோட்டார்சைக்கிளோட்டி கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தார். அவர் கிராப் சீருடை அணிந்திருந்தார்.
அவ்விருவரும் உணவு விநியோக ஊழியர்களாக இருக்கலாம் என சீன நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை காலை அக்காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, 91,100 பார்வைகளைப் பெற்றுள்ளது.
விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.

