அதிபர் மாளிகைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
7a8a63ce-42f7-4d54-9d2f-4e5f0fb3dd64
அதிபர் மாளிகையைக் காணவந்த வெளிநாட்டு ஊழியர்கள் அதிபர் தர்மனுடனும் அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: முத்துகிருஷ்ணன்

தீபாவளியன்று அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்த்ததுடன், அதிபரையும் அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் நான்கு இந்திய வெளிநாட்டு ஊழியர்கள்.

கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது காத்திருந்த அவர்களது ஆசை நிறைவேறியது.

லிட்டில் இந்தியாவில் சில்லறை வணிக நிறுவனமொன்றிவ் வேலைசெய்யும் திரு முத்துகிருஷ்ணன், 29, தனது சக ஊழியர் ரவி, கட்டுமான ஊழியர்களான ஹரிஹரப்ரியன், கணேஷ் ஆகியோருடன் அதிபர் மாளிகைக்கு வந்திருந்தார்.

அங்கு பல நாடுகளின் பரிசுப்பொருள்களைக் கண்டு பரவசமடைந்த அவர்கள், அங்கிருந்த மாநாட்டு மண்டபத்தின் அழகையும் ரசித்தனர்.

புல்லாங்குழல் கலைஞர்கள் டாக்டர் கானவினோதன், டான் சிங் லுன், சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றம் வழங்கிய இசைநிகழ்ச்சிகளையும் அதிபரோடு கண்டுகளித்தனர்.

அதிபர் மாளிகையைச் சுற்றியிருந்த ஜப்பானியத் தோட்டம், அன்னப்பறவைக் குளம் போன்றவற்றைக் கண்டு இயற்கையழகிலும் மூழ்கினர்.

அதிபரையும் அவருடைய துணைவியாரையும் நேரில் கண்டதை அரிய அனுபவமாகக் குறிப்பிட்டார் முத்துகிருஷ்ணன்.

“பண்டிகை நாள்களில் மக்களுக்கு அதிபர் மாளிகையைக் காண வாய்ப்பளிப்பது சிறப்பான திட்டம். இதன்வழி, மக்களுக்கு கலாசார விழிப்புணர்வு ஏற்படுகிறது. சிங்கப்பூரைப் பற்றிய பல தகவல்களையும் தெரிந்துகொண்டோம். இவ்வாண்டு தீபாவளி எங்களுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்