ஜூரோங் வெஸ்ட்டில் நிகழ்ந்த வாகன விபத்தில் தனது லாரியின்கீழ் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.
பெனோய் சாலைக்கும் ஜாலான் அகமது இப்ராகிமுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. லாரியும் ஒரு காரும் விபத்துக்கு உள்ளாயின.
லாரியின் 43 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்தது. காலை 8.25 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.
விபத்து நேர்ந்த பிறகு சேதமடைந்த கார் சாலைச் சந்திப்பின் நடுவே இருப்பதைக் காட்டும் காணொளி டெலிகிராம் செயலியில் பகிரப்பட்டது. போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகே ஒரு லாரி இடது பக்கமாகக் கவிழ்ந்திருந்ததும் காணொளியில் தெரிந்தது.
குறைந்தது இரண்டு மருத்துவ உதவி வாகனங்கள், மூன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு வாகனங்கள் ஆகியவையும் காணப்பட்டன.