குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் பணியாற்றிவரும் வெளிநாட்டு ஊழியர்களை பண்டிகைக் காலத்தில் மகிழ்விக்கும் விருந்து, கலைநிகழ்ச்சிகள் தீவெங்கும் நடைபெற்று வருகின்றன.
அவற்றில் ஒன்றாக, ‘ஆக்டிவ்ஃபயர் புரொடக்ஷன்’ தீப்பாதுகாப்புச் சேவை நிறுவனம் ஜூரோங் வட்டாரம், நெய்தல் ரோட்டிலுள்ள தன் ஆலையில் நவம்பர் 11 சனிக்கிழமையன்று தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஏறத்தாழ 250 ஊழியர்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு பிறகு முதன்முறையாக இக்கொண்டாட்டம் பெரிய அளவில் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
ஊழியர்களின் விருப்பங்களை அறிந்துகொண்டு ஆடல், பாடல், சண்டி மேளம், சுவையான உணவு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ராமலிங்கம் வடிவேல் தெரிவித்தார்.
“மூத்த ஊழியர்கள் நால்வர் இணைந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். மொத்த ஏற்பாட்டிற்கும் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆயின,” என்றார், சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் திரு வடிவேல்.
பணிபுரியும் அனைவருக்கும் இடையே இன வேற்றுமை கடந்த நல்லுறவு இருப்பதாக நிறுவன முதலாளி டோமினிக் ஆங் கூறினார்.
“உல்லாசமாக இருந்தோம், நன்றாகக் கொண்டாடினோம். ஆனால், வேலை என்று வந்தால் கடுமையாக உழைப்போம்,” என்றார் திரு ஆங்.
“சொந்தக் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்நாட்டினர் பக்கபலமாக உள்ளனர். பாதுகாப்புடன் வேலை செய்து அவர்கள் குடும்பத்தினரிடம் திரும்பவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிதாகத் திருமணம் செய்துள்ள ஊழியர் ஜெயபால் ஜெயபிரகாஷ், 28, மனைவியைப் பிரிந்து இங்கு இருக்கிறார்.
“தலைத்தீபாவளியைக் குடும்பத்துடன் கொண்டாட முடியாவிட்டாலும் அந்தக் கவலை இல்லாதபடி ஊழியர்களுக்காக இங்கு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன,” என்றார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஜெயபிரகாஷ்.

