தொடர்ந்து செயல்படும் சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள்

2 mins read
5c75e220-6618-47ba-be85-f63d872061cd
நடவடிக்கை எடுக்கப்படும்போதும் அத்தகைய இணையத்தளங்கள் உருவெடுத்த வண்ணம் உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உதவி நாடும் சூதாட்டப் பிரச்சினைக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 800லிருந்து 1,000க்குள் பதிவானது.

அத்தகையோர் பல்வேறு அமைப்புகளிடம் உதவி நாடினர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் சட்டவிரோத இணைய சூதாட்டத்தில் பங்கேற்றதை ஒப்புக்கொண்டனர்.

சூதாட்டப் பிரச்சினை தொடர்பான தேசிய மன்றத்தின் (என்சிபிஜி) தலைவர் சிம் கிம் குவான் இந்தப் புள்ளி விவரங்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பின்கீழ் வராத இணையத்தளங்களில் இடம்பெறும் இணைய சூதாட்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. எனினும், பலர் பொழுதுபோக்கு நடவடிக்கையாக சட்டவிரோத இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரபூர்வ சூதாட்ட இணையத்தளங்கள் வழங்காத அம்சங்கள் சட்டவிரோதமானவற்றில் இருப்பது அதற்கான காரணங்களில் ஒன்று. மேலும், அத்தகைய இணையத்தளங்களில் அதிகத் தொகையை ஈட்டித் தரக்கூடிய பந்தயங்களைக் கட்டமுடியும்.

“மக்களை சூதாட்டத்துக்குள் ஈர்க்கும் வழிகளை சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் பின்பற்றுகின்றன. அவை சமூகம் சார்ந்த பாதுகாப்பு அம்சங்களையோ மக்களைப் பொறுப்பான முறையில் சூதாட்டத்தில் ஈடுபடச் செய்வதற்கான வழிமுறைகளையோ பயன்படுத்துவதில்லை.

“இதனால் சூதாட்டப் பிரச்சினைகளுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு அமைப்புகளிடம் உதவி நாடியோரைப் பார்க்கும்போது இது தெரிகிறது,” என்று திரு சிம் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் 1,900க்கும் அதிகமான சூதாட்ட இணையத்தளங்களுக்கும் 260க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், 2017லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆணையம் நிதிப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து 115,000 கடன் அட்டைப் பரிவர்த்தனைகளை முடக்கியிருக்கிறது.

இப்படியிருந்தும் சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் தொடர்ந்து உருவெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்