மண்டாயில் உள்ள பறவைகள் மகிழ்வனம் (Bird Paradise), பெங்குவின்களுடன் ஒரு நாள் தங்கும் முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது, வருகையாளர்களுக்குப் புதிய, இனிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்குவின் இனப்பெருக்க நிலையத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பும் வழங்கப்படும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு கடந்த மே மாதம் பறவைகள் மகிழ்வனம் ஆரவாரமில்லாமல் தொடங்கப்பட்டது.
நவம்பர் 15ஆம் தேதி அது பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
அப்போது முதல் 17 ஹெக்டர் பரப்பளவுள்ள பூங்கா, (சுமார் 24 காற்பந்து திடலுக்குச் சமமானது) 600,000 உள்ளூர், வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்தது.
புதிய இனப்பெருக்கம் மற்றும் ஆய்வு நிலையத்தில் குஞ்சுகளை கையால் பராமரித்து வளர்க்கப்படுவதை வருகையாளர்கள் நேரடியாகப் பார்க்கலாம்.
கையால் வளர்க்கப்படுவதால் குஞ்சுகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பெற்றோர் கவனிப்பது போன்ற வழிகளில் குஞ்சுகளை அங்குள்ள பராமரிப்பாளர்கள் பொறுமையுடன் அரவணைத்து குஞ்சுகளை வளர்க்கின்றனர்.
பூங்காவில் அதன் பறவைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய பின்னணியையும் பார்வையாளர்கள் இந்த நிலையத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
பறவைகள் பூங்கா அறிமுகப்படுத்தியுள்ள ஒரு நாள் முகாமில், இரவு முழுவதும் பெங்குவின்களுடன் தங்கிப் பொழுதைக் கழிக்கலாம்.
இந்த, இரண்டு நாள், ஓர் இரவு அனுபவம் நான்கு பேர் கொண்ட குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பெங்குவின் காட்சிக் கூடத்தில் ‘சதர்ன் லைட்ஸ்’ திரையிட்டுக் காட்டப்படும்.
பறவைகள் கூடாரங்களுக்கு வழிகாட்டும் பயணங்களுடன் பூங்காவில் பறவைகள் சிகிச்சை நிலையமும் பார்வையாளர்களுக்குக் காட்டப்படவிருக்கிறது.