பேருந்திலிருந்து இறங்கிய பயணிகளுக்கு குடை பிடித்த மாணவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியிருக்கிறார்.
கண்ணாடிப் போட்ட சிறுவன் ஒருவன், பயணிகளுக்கு குடை பிடித்த காணொளி சமூக ஊடகத்தில் பரவி ஏராளமானவரை ஈர்த்திருந்தது.
இந்த நிலையில் அந்த மாணவர், ஸ்பிரிங்பீல்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹிவீ சே என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பே யாம் கெங், நவம்பர் 15ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு விழாவொன்றில் பங்கேற்க அந்த மாணவருக்கு தமது குழு அழைப்பு விடுத்ததாகவும் அவர் சொன்னார்.
அந்த ‘கேரிங் கார்னிவல்’ விழாவில் ஹிவீ சேவுக்கு திரு பே யாம் கெங் பாராட்டுக் கடிதம் வழங்கி கௌரவித்தார்.
“ஆறு பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு குடை பிடிப்பதற்காக மாணவர் தொடர்ந்து நின்று கொண்டிருந்தார்,” என்று போக்குவரத்து மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான திரு பே தெரிவித்தார்.
ஹிவீ சேயின் கருணை உள்ளத்தைக் காட்டும் காணொளி முதலில் ‘எஸ்ஜிஃபாலோசால்’ என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் செப்டம்பர் 13ஆம் பதிவேற்றப்பட்டது. அது, ஏறக்குறைய 90,000 விருப்பங்களைப் பெற்றது.
அந்த சமயத்தில் ஹிவீ சே பள்ளிச் சீருடையில் இருந்தார். தெம்பனிஸ் விரைவுச் சாலை வழியாக பொங்கோல் ரோட்டுக்கு முன்புள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் குடையுடன் இருந்த அவர், ஆறு பேருந்துகளிலிருந்து இறங்கிய ஒவ்வொரு பயணிக்கும் குடை பிடித்து மழையில் நனையாமல் அழைத்துவந்தார்.

