தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்புப் பள்ளி, சாதாரண பள்ளி மாணவர்களைப் பிணைத்த நிகழ்ச்சி

2 mins read
cbe6e972-9db9-4cf9-a169-a28416b10c90
‘கம்போங்’ உணர்வை வெளிப்படுத்தும் ‘தோத்தோங் ரோயோங்’ படைப்பை இணைந்து வழங்கினர் சிறப்புப் பள்ளி, சாதாரண பள்ளி மாணவர்கள். - படம்: கோ வெய் டெங்
multi-img1 of 2

சிறப்புத் தேவைகளைக் கொண்டாடும் ஆகப் பெரிய கலை நிகழ்ச்சி புதன்கிழமை நவம்பர் 15ஆம் தேதி அன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடைபெற்றது.

‘எக்ஸ்ட்ராடினரி பீப்பள்’ அறநிறுவனம், 2018ஆம் ஆண்டு முதல் வழங்கிவரும் வருடாந்திர ‘எக்ஸ்ட்ராடினரி’ கொண்டாட்டத்தில் இம்முறை சிறப்புப் பள்ளிகள், அமைப்புகள், சாதாரண பள்ளிகளிலிருந்து சுமார் 750 திறன்மிக்க கலைஞர்கள் பங்கேற்றனர். ‘அன்பு, நம்பிக்கையின் கலைடாஸ்கோப்’ என்பதே இவ்வாண்டின் கரு.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும் வருகையளித்தனர்.

அவர்கள் சிறப்புத் தேவையுடைய கலைஞர்களின் ஓவியங்களைக் கண்டதோடு, கலைநிகழ்ச்சியையும் கண்டு களித்தனர்.

‘ஏபிஎஸ்என்’ காத்தோங் பள்ளி, ‘மைண்ட்ஸ் டவுனர்’ கார்டன்ஸ் பள்ளி, பெருமூளைவாதச் சங்கம் சிங்கப்பூர் போன்ற பல்வேறு அமைப்புகளிலிருந்தும் கலைஞர்கள் அதிபரின் முன்னிலையில் மேடையேறினர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக, விருந்தினர்களும் கலைஞர்களும் 1,563 கைமணிகள் ஏந்தி, சிங்கப்பூரின் ஆகப் பெரியக் கைமணிக் கூட்டணி என சிங்கப்பூர்ச் சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றனர்.

சிறப்புப் பள்ளி நடனக்குழுத் தலைவரின் இலக்கு

‘ஏபிஎஸ்என் தங்ளின்’ பள்ளியின் நடனக் குழுத் தலைவர் நிஷான், எதிர்காலத்தில் சொந்த தெரு நடனக் குழுவை அமைத்து அனைத்துலக அளவில் போட்டியிட விரும்புகிறார்.
‘ஏபிஎஸ்என் தங்ளின்’ பள்ளியின் நடனக் குழுத் தலைவர் நிஷான், எதிர்காலத்தில் சொந்த தெரு நடனக் குழுவை அமைத்து அனைத்துலக அளவில் போட்டியிட விரும்புகிறார். - படம்: கோ வெய் டெங்

“இந்நிகழ்ச்சிமூலம் என் வாழ்வில் நான் இதுவரை உணராத மகிழ்ச்சியை அடைந்தேன்,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிஷான் நாயுடு தியாளன், 16.

‘ஏபிஎஸ்என் தங்ளின்’ சிறப்புப் பள்ளியில் பயிலும் நிஷான், தன் பள்ளியின் நடனக் குழுவின் தலைவராக, சக மாணவர்களையும் நடனத்தில் வழிநடத்துகிறார்.

சிங்கப்பூர் இளையர் விழாக் கலைப் படைப்பு 2023ல் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, ‘எஸ்ஓஎஸ்ஜி’ டான்ஸ்போர்ட் பரிமாற்றம் 2023, ‘எல்ஸ்ட்ராடினரி’ கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் இவர் கலந்துகொண்டுள்ளார்.

“எனக்கென ஒரு தெரு நடனக் குழுவைச் சொந்தமாக உருவாக்கி, வெளியூருக்குச் சென்று போட்டியிட ஆசைப்படுகிறேன்,” என்றார் நிஷான்.

தன் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள், குடும்பத்தின் உந்துதலைக் காரணமாகச் சுட்டினார்.

சிறப்புப் பள்ளி, சாதாரணப் பள்ளி மாணவர்களுக்கிடையே பிணக்கம்

ஒற்றுமையாக நடனமாடிய சாதாரண பள்ளி, சிறப்புப் பள்ளி மாணவர்களுடன் அவர்களை ஒருங்கிணைத்த ஆசிரியைகள் துர்கா மணிமாறன், சாரம்மா மெத்தியூஸ் (பின்வரிசை இடமிருந்து).
ஒற்றுமையாக நடனமாடிய சாதாரண பள்ளி, சிறப்புப் பள்ளி மாணவர்களுடன் அவர்களை ஒருங்கிணைத்த ஆசிரியைகள் துர்கா மணிமாறன், சாரம்மா மெத்தியூஸ் (பின்வரிசை இடமிருந்து). - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, ‘கம்போங்’ உணர்வை வெளிப்படுத்தும் ‘கோத்தோங் ரோயோங்’ படைப்பை வழங்கினர் நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளியின் 15 வயது அர்ஜுனன் அண்ணாதுரை அபர்ணா, சி வர்ஷா.

அவர்களுடன் இணைந்து நடனமாடினார் உட்லண்ட்ஸ் கார்டன்ஸ் பள்ளி (மைண்ட்ஸ்) மாணவி மஹாஸ்ரீ, 18.

“இதன்மூலம் சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பற்றிய புரிதல் எங்களுக்கு மேம்பட்டது. அவர்களுக்கும் தன்னம்பிக்கை வளர்ந்தது,” என பாராட்டினார் வர்ஷா.

“சாதாரண பள்ளி மாணவர்களுக்கு சிறப்புத் தேவைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்,” என்றார் பத்து ஆண்டுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவரும் நடன ஆசிரியை துர்கா மணிமாறன்.

குறிப்புச் சொற்கள்