2022ஆம் ஆண்டில் 1.4 மில்லியன் சிங்கப்பூரர், நிரந்தரவாசிகளில் 472,000 பேர் சொந்தமாக கார் வைத்திருந்தனர். இது, 2012ஆம் ஆண்டின் 459,000 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் வியாழக்கிழமை இந்த விவரங்களை வெளியிட்டார். இதற்கு முன்பு இது தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் சீ விளக்கம் அளித்துள்ளார். ஒட்டுமொத்தமாக கார் வைத்திருக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 2012ல் 40 விழுக்காட்டிலிருந்து 2022ல் 34 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம். 2012ல் 1.15 மில்லியனாக இருந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 2022ல் 1.4 மில்லியனுக்கு அதிகரித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
சென்ற நவம்பர் 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள் பற்றி பேசிய அவர், சொந்தமாக கார் வைத்திருக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 2013ல் 40 விழுக்காட்டிலிருந்து அண்மைய ஆண்டுகளாக மூன்றில் ஒரு பங்காக குறைந்தது என்றார். சிலர் இதனை குறைவான சிங்கப்பூர்வாசிகள் சொந்தமாக கார் வைத்துள்ளனர் என்று புரிந்துகொண்டனர் என்று அவர் விளக்கமளித்தார்.
2012ஆம் ஆண்டைவிட (693,000) 2022ல் (928,000) அதிகமான சிங்கப்பூர்வாசிகளிடம் சொந்தமாக கார் இல்லை என்பது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கணக்கீட்டின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
மற்றொரு நிலவரத்தில் வாகன உரிமைச் சான்றிதழ் தேவைக்கு தனியார் வாடகைக் கார்கள் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 2023ஆம் ஆண்டு முதல் மூன்று காலாண்டுகளில் ‘ஏ’ பிரிவு சிஓஇ ஒதுக்கீட்டில் கார் குத்தகை நிறுவனங்கள் 21 விழுக்காட்டை வென்றுள்ளன. ‘பி’ பிரிவில் அவை 23 விழுக்காட்டை கைப்பற்றியிருந்தன.
‘பிரிவு ஏ’ சிறிய, குறைந்த சக்தி உடைய, மின்சார வாகனங்களுக்கானது. ‘பிரிவு பி’ அதிக சக்தி வாய்ந்த, பெரிய, மின்சார வாகனங்களுக்குரியது.

