நொடித்துப்போன வழக்கறிஞர் ஒருவர், வழக்குரைஞராகப் பணியாற்ற சான்றிதழ் இல்லை யென்றாலும் தனது கட்சிக்காரர்களிடம் இன்னமும் வழக்கறிஞராக இருப்பதாக நடித்து 40,000 வெள்ளி வரை மோசடி செய்துள்ளார்.
ஹெலன் சியா சிவி இம், 53, இருபது ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் தொழில் புரிந்தவர். நவம்பர் 21ஆம் தேதி அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இரண்டு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள், வழக்கறிஞராக பணியாற்றுவதற்கான அங்கீகாரம் பெற்றுள்ளதாக தன்னைக் காட்டிக் கொண்ட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள்.
2016 டிசம்பர் 17 முதல் 2018 மே 30 வரை ஹெலன் சியாவிடம் வழக்கறிஞருக்கான சான்றிதழ் இல்லை. அவர் நொடித்துப் போனவராக அறிவிக்கப்பட்டதால் வந்தவினை.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் இரண்டு வழக்குச் சம்பவங்களில் தன்னை வழக்கறிஞர் போல காட்டிக் கொண்டதாக குற்றச்சாட்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பராமரிப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு உத்தரவு வழக்குகளில் ஹெலன் சியா சட்ட ஆலோசனைகளை வழங்கி சட்டம் தொடர்பான பணிகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவரது கட்சிக்காரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
பராமரிப்பு வழக்கில் ஹெலன் சியா தனது கட்சிக்காரரை மொத்தம் $13,685 ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது. 2017 ஆகஸ்ட் 25க்கும் 2018 மார்ச் 12க்கும் இடையே இந்தக் குற்றச் செயல் நடந்துள்ளது.
மற்றொரு வழக்கில் 2018 பிப்ரவரி 14க்கும் 2018 மே 2க்கும் இடையே அவரது கட்சிக்காரர் ஹெலன் சியாவிடம் $26,000 கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 2021ல், பராமரிப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு உத்தரவு வழக்குகளில் இரண்டு முறைகேடு குற்றச்சாட்டுகளில் ஹெலன் சியா குற்றவாளி என ஒழுங்குமுறை தீர்ப்பாயம் முடிவு செய்தது.
அந்த வழக்கில் ஒரு பெண் கட்சிக்காரரைப் பிரதிநிதிக்க தனக்கு அங்கீகாரம் இருப்பதாக அவர் காட்டிக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.
அப்போது அவரிடம் பயிற்சி சான்றிதழ் இல்லை.
பின்னர் அவரது திவால் நிலையை ரத்துசெய்வதற்காக கட்சிக்காரர் மற்றும் கட்சிக்காரர்களின் குடும்பத்தினரிடமிருந்து $60,000 அவர் கடன் வாங்கினார்.
வழக்கறிஞர் தொழில் நடத்தை விதிகளின்கீழ், வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களிடமிருந்து கடன் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஹெலன் சியாவின் திவால்நிலை மே 22, 2018 அன்று இறுதியாக ரத்து செய்யப்பட்டது.
அதே ஆண்டில் மே 31ஆம் தேதி அவர் சரியான பயிற்சி சான்றிதழைப் பெற்றார். இதற்கிடையே கட்சிக்காரர் ஒருவர் அவருக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 2022ல் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் ஹெலன் சியாவின் வழக்கறிஞர் தகுதியை ரத்து செய்தது.
முன்னாள் வழக்கறிஞரான ஹெலன் சியா $80,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை நிக்கோலஸ் அண்ட் டான் சட்ட நிறுவனத்தின் நிக்கோலஸ் ஜெயராஜ் பிரதிநிதித்துள்ளார்.
ஹெலன் சியாவின் வழக்கு டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

