சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் அமெரிக்காவுக்கான ரோபோ டாக்சிகள்

2 mins read
ed3803d2-190a-473b-8a05-b72fe7eb256c
அதிநவீன வசதிகளைக் கொண்ட ஹெச்எம்ஜிஐசிஎஸ் ஆலை. - படம்: ஹியூண்டாய் மோட்டார்
multi-img1 of 2

சிங்கப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹியூண்டாய் வாகன நிறுவனத்தின் ஆலையில் அமெரிக்காவுக்கான தானியக்க ரோபோ டாக்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் அத்தகைய டாக்சிகள் முதலில் லாஸ் வேகாஸ் நகரில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 30 ரோபோ டாக்சிகளும் 2024ஆம் ஆண்டு 150 ரோபோ டாக்சிகளும் சிங்கப்பூரில் உள்ள ஹெச்எம்ஜிஐசிஎஸ் எனும் ஹியூண்டாயின் ஆலையில் தயாரிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் இணைத் தலைவரும் அதன் தொழில்நுட்பப் புத்தாக்கக் குழுமத்தின் தலைவருமான திரு அல்ஃபே‌ஷ் பட்டேல் கூறினார்.

ரோபோ டாக்சிகள், வாகனத் தொழில்நுட்ப நிறுவனமான அப்டியுடன் இணைந்து தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு ரோபோ டாக்சியிலும் 30க்கும் மேற்பட்ட உணர் கருவிகள் இருக்கும்.

இந்த ரோபோ டாக்சிகள் தானியக்க வாகனத் தரநிலையில் நான்காம் நிலையில் உள்ளன. அப்படியென்றால் கைகளைப் பயன்படுத்தாது சாலைகளைப் பார்க்காமல் அதிக நேரத்துக்கு ரோபோ டாக்சிகளைச் செலுத்தமுடியும்.

இருந்தாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக லாஸ் வேகாஸ் நகரில் ஓடும் ரோபோ டாக்சிகளில் ஓட்டுநர்கள் இருப்பர்.

புலிம் அவென்யூவில் அமைந்துள்ள ஹியூண்டாய் நிறுவனத்தின் எம்ஜிஐசிஎஸ் ஆலை 400 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்டது. இவ்வாண்டு தொடக்கத்தில் அது செயல்படத் தொடங்கியது.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமையன்று ஆலையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். ஏழு தள உயரம் கொண்ட ஆலையின் பரப்பளவு 86,900 சதுர மீட்டர்.

இவ்வாண்டிறுதிக்குள் ஆலையில் சிங்கப்பூருக்கென சுமார் 300 ஐயோனிக் 5 ரக மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவிலிருந்தும் இந்தோனீசியாவிலிருந்தும் வரும் பாகங்களைக் கொண்டு வாகனங்கள் இங்கு தயாரிக்கப்படும்.

இந்நிலையில், ஹெச்எம்ஜிஐசிஎஸ், சிங்கப்பூரில் உள்ள சில கழகங்களுடன் மூன்று இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் உள்ளிட்டவற்றுடன் இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.

புதிய தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி புத்தாக்கத்தை ஊக்குவிப்பது போன்ற காரணங்களுக்காக இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாயின.

குறிப்புச் சொற்கள்