நன்கொடைகளை ஊக்குவிக்க விதிகள் தளர்வு

நன்கொடைகளை ஊக்குவிக்க விதிகள் தளர்வு

2 mins read
2693aa43-81a8-49c8-a81f-5b2de5863f29
நன்கொடை நிர்வாக அமைப்பு தொடர்பாக நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங். - படம்: கலாசார, சமூக, இளையர் அமைச்சு
Google News Preferred Icon

சிங்கப்பூரில் தனியார், சமூக அறநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மற்ற பயனாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதையும் தாண்டி கூடுதல் உதவி புரிய ஏதுவாக வழிகாட்டி நெறிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

நிதியுதவி வழங்குவது தொடர்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, அறநிறுவனங்கள் ஆய்வு, பயனாளர்களுக்கு நேரடியாக உதவி புரிவதுடன் கடன் உதவி வழங்குவது, சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக முறிகளை வெளியிடுவது ஆகியவற்றிலும் ஈடுபடலாம்.

இவ்வாறு வெளியிடப்படும் முறிகளின் மூலம், நன்கொடையாளர்கள் தொண்டு நிறுவனங்களில் சமுதாய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அத்துடன், இதில் கிடைக்கும் பலனில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற நிதியுதவி அல்லாத நடவடிக்கைகள் நிதியுதவி வழங்குவோரின் மொத்த நடவடிக்கைகளில் 10 விழுக்காடு மட்டுமே இடம்பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

இந்தப் புதிய விதிகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். இந்த விதிகள், சிங்கப்பூரை இந்த வட்டாரத்தின் தொண்டு மையமாக உருவாகும் நோக்கத்துடன் வகுக்கப்பட்டுள்ளன.

இது பற்றிய மாநாட்டில் பேசிய கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங், “இந்த மாற்றங்கள் ஓரளவு நீக்குப்போக்குத் தன்மையை அளிக்கும் விதத்தில் நியுதவி வழங்குவோரின் நல்ல காரியங்களை ஊக்குவிக்கும். அதே வேளையில், இந்தப் புதிய விதிகள் அடிப்படைக் கோட்பாடான வெளிப்படைத்தன்மை, நிர்வாக அமைப்பு முறை ஆகியவற்றுடன் வலுவான பொறுப்பேற்கும் உணர்வையும் கட்டிக்காக்கும்,” என்றார்.

எனினும், இந்தப் புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்கீழ் வர நிதியுதவி வழங்குநர்கள் சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

உதாரணமாக, அவை லாப நோக்கமற்றவையாக, அரசு சாரா நிறுவனமாக விளங்க வேண்டும். அத்துடன், அவை தனிநபர், அல்லது ஒரு குடும்பம் அல்லது ஒரு நிறுவனத்திடம் இருந்து நிதி பெறும் நிலையில் இருக்க வேண்டும். .

அத்துடன், அவை ‘இன்ஸ்டிடியூஷன் ஆஃப் பப்ளிக் கேரக்டர்’ என்ற அங்கீகாரம் பெற்ற பொது நிறுவனங்களாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது. இதற்குக் காரணம் அத்தகைய நிறுவனங்கள் வரிக் கழிவுவுடன் கூடிய நன்கொடைகள் பெறுபவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, இந்தப் புதிய விதிகளின்கீழ் வரும் அமைப்புகளாக லீ ஃபௌண்டேஷன், கேப்பிட்டல் ஃபௌண்டேஷன், ஹோப் ஃபௌண்டேஷன் ஆகியவை விளங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்