சிங்கப்பூர் பொருளியல், வர்த்தகம் தொடர்பான துறைகள் மிதமான வளர்ச்சி கண்டு வருவதால், 1லிருந்து 3 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறியுள்ளது.
சிங்கப்பூரின் ஏற்றுமதி வலுவிழந்துள்ளதால் இவ்வாண்டின் வளர்ச்சி 1 விழுக்காடு அளவே இருக்கும் என்று அமைச்சு தனது காலாண்டு ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சு சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 0.5 லிருந்து 1.5 விழுக்காடு வரை இருக்கும் என்று ஆகஸ்ட் மாதம் முன்னுரைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த வளர்ச்சி விதிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாண்டு தொடக்கத்தில் வளர்ச்சி முன்னுரைப்பு 0.5 லிருந்து 2.5 விழுக்காடு வரை என்று கூறப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
மூன்றாம் காலாண்டில், ஆண்டு அடிப்படையில், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.1 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக அமைச்சு விளக்கியது. இந்த வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 0.5 விழுக்காடாகவும், ஆண்டின் முதல் காலாண்டில் 0.4 விழுக்காடாக இருந்ததாகவும் அறிக்கை சுட்டியது.
இந்த மூன்றாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அமைச்சு இதற்கு முன் கணித்த 0.7 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாதி ஆண்டின் மந்தமான பொருளியல் வளர்ச்சியை தொடர்ந்து மூன்றாம் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமானது பொருளியல் வளர்ச்சி சீராகி வருவதைக் குறிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வளர்ச்சி 2024ஆம் ஆண்டில் பொருளியல் மீட்சியடைய உள்ளதைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்று அமைச்சு கருத்துக் கூறியுள்ளது.
காலாண்டு அடிப்படையில், பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட பொருளியல் வளர்ச்சி 1.4 விழுக்காடு என்று அமைச்சு தெரித்துள்ளது. இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 0.1 விழுக்காடாக இருந்ததை வைத்துப் பார்க்கும்பொழுது தற்போதைய 1.4 விழுக்காடு வளர்ச்சி வேகமான ஒன்று என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலான மூன்றாம் காலாண்டு வளர்ச்சி அதிகரித்து வரும் விமானப் பயணங்கள், பயணிகளின் சிங்கப்பூர் வருகை ஆகியவற்றால் ஏற்பட்டது என்றும் அமைச்சு கூறியது. இது விமானப் போக்குவரத்து, தங்குமிட வசதி ஆகிய துறைகளுக்கு முட்டுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியது.