அரசாங்க அணுகுமுறையால் அனைவருக்கும் வாழ்க்கைச் செலவினம் குறைந்துள்ளது: பிரதமர் லீ

அரசாங்க அணுகுமுறையால் அனைவருக்கும் வாழ்க்கைச் செலவினம் குறைந்துள்ளது: பிரதமர் லீ

2 mins read
a5c2a2a7-471c-4101-9642-b739d584cc36
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொதுச் சேவைகளில் உதவி வழங்குதல் தொடர்பிலான சிங்கப்பூர் அரசாங்கத்தின் அணுகுமுறை மேம்பட்டதாகக் கருதப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்க் குடும்பங்கள் அனைத்திற்கும் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் உத்தியை அரசாங்கம் பின்பற்றுவதன் நோக்கம், அத்தியாவசியமான பொதுச் சேவைகள் குறைந்த செலவில், திறம்பட இயங்குவதை உறுதிசெய்வதே என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

அதேநேரத்தில், தேவையான அம்சங்களைக் கொண்டிருப்பதும் தேவையற்ற அம்சங்களை நீக்குவதுமாக அரசாங்கம் திறன்படச் செயலாற்றுவதும் உறுதிசெய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய அணுகுமுறையால், பொதுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. அவை ஈட்டும் லாபத்திற்கு ஈடாகச் செலவு செய்ய நேரிடுகிறது. செலவுகளைக் குறைக்கும் அதேவேளையில் திறம்படச் செயலாற்ற வேண்டியுள்ளது என்பதைப் பிரதமர் சுட்டினார்.

நவம்பர் 22ஆம் தேதி, தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தேசியப் பேராளர் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து திரு லீ உரையாற்றினார்.

சில குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படுவதை அரசாங்கம் அறிந்துள்ளது. அதனால் ரொக்கம் அல்லது ‘யு-சேவ்’ பற்றுச்சீட்டுகள், பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள், ‘ஜிஎஸ்டி’ பற்றுச்சீட்டுகள் போன்ற வகைகளில் அந்த உதவியை அரசாங்கம் வழங்குகிறது என்றார் அவர்.

இந்த நிதியாண்டில் சில குடும்பங்கள் நேரடி உதவியாக $9,000வரை பெறக்கூடும் என்று திரு லீ சொன்னார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பொதுச் சேவை தொடர்பில் வசதி குறைந்தோருக்கு உதவி வழங்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அணுகுமுறை மேம்பட்டது என்றார் அவர்.

பொதுமக்கள் சில நேரங்களில் பொதுச் சேவைகள் ஒருபோதும் லாபம் ஈட்டக்கூடாது என்று வாதிடுகின்றனர். ஆனால் அது தவறான அணுகுமுறை என்று பிரதமர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் பயனீட்டுச் சேவை வழங்குவோரும் திறம்படச் செயலாற்றுவதற்கான அழுத்தம் இல்லாமற்போகக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.

நியாயமான லாபம் ஈட்டினால் மட்டுமே அத்தகைய நிறுவனங்கள் சேவைத் தரத்தை மேம்படுத்துவதில் மறுமுதலீடு செய்ய இயலும் என்று கூறிய திரு லீ, சிங்கப்பூரின் அணுகுமுறை சிறப்பானது என்றார்.

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தின் தரம் உயர்வானது என்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு பயனீட்டுச் சேவைகள் நம்பகமான முறையில் கட்டுப்படியான விலையில் வழங்கப்படுவதாகவும் தரமான சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்