உரிமம் பெற்று கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கடன் வாங்க விண்ணப்பிப்போரின் நிதி நிலைமையைச் சோதிக்க விரும்பினால் அவர்களைப் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் தெரிவித்து, வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள புதிய சட்டத் திருத்தம் வகைசெய்கிறது.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) அந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
உரிமம் பெற்று கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம்பெறும் கடன் வழங்கும் அமைப்புகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.
அந்த அமைப்புகள், குறிப்பிட்ட விண்ணப்பதாரர் கடனைப் பெறத் தகுதியானவரா, அவருக்கு ஏற்கெனவே கடன் ஏதும் இருக்கிறதா என்பனவற்றின் தொடர்பில் கூடுதல் விவரங்களை அளிக்கும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்த விண்ணப்பதாரருக்கு கடன் தருவது குறித்து முடிவெடுக்க இயலும்.
தற்போது, கடன் வழங்குவோர் சட்டத்தின்கீழ் அந்நிறுவனங்கள் யாருடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஸாம் கூறினார்.
அவை, ‘எம்எல்சிபி’ எனப்படும் அமைப்பிடம் மட்டுமே கடன் கேட்டு விண்ணப்பித்தோரின் அடையாள எண்ணைப் பகிரலாம்.
சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால், தகவல் தொழில்நுட்ப உதவி வழங்கும் நிறுவனங்கள், கடனை மீட்க உதவும் நிறுவனங்கள் போன்ற மூன்றாம் தரப்பினருடன் அதைப் பகிர முடியும்.
கடன் விண்ணப்பம் செய்தவர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியானவையா என்று அரசாங்க அமைப்புகளிடமும் சரிபார்க்க முடியும் என்று கூறப்பட்டது.