மத்திய கிழக்குப் போர்: வழிகாட்டிக் கையேட்டை தொகுத்துள்ள முயிஸ்

மத்திய கிழக்குப் போர்: வழிகாட்டிக் கையேட்டை தொகுத்துள்ள முயிஸ்

2 mins read
0617ddc2-ee67-46e1-be28-252ef32fddbf
சமயத் தலைமைத்துவக் கருத்தரங்கு 2023ல் நடைபெற்ற கலந்துரையாடல். - படம்: பெரித்தா ஹரியான்

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் அதன் தொடர்பாக எத்தகைய அணுகுமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் உள்ளூர் முஸ்லிம் சமூகத்துக்கு ஆலோசனை கூறும் வகையில் வழிகாட்டிக் கையேடு ஒன்றை முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமும் அதன் பங்காளித்துவ அமைப்புகளும் தொகுத்துள்ளன.

நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற ‘சமயத் தலைமைத்துவக் கருத்தரங்கு 2023’க்குப் பிறகு 28 பக்கங்களைக் கொண்ட இந்த வழிகாட்டிக் கையேட்டை முயிஸ் அமைப்புடன் சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்விமான்கள் மற்றும் சமயக் கல்வியாளர் சங்கம், சமய மறுவாழ்வுக் குழு, அசாதிசா இளையர் கட்டமைப்பு ஆகியவை தொகுத்தன.

மத்திய கிழக்குப் போர் பற்றி சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு சிறந்த முறையில் வழிகாட்டுவது குறித்துக் கலந்துரையாட கருத்தரங்கு நடைபெற்றது.

தற்போது மலாய்மொழியில் மட்டுமே வழிகாட்டிக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருக்கும் வழிகாட்டிக் கையேட்டைத் தொகுத்து வருவதாக முயிஸ் தெரிவித்தது.

அடக்குமுறையை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை வழிகாட்டிக் கையேட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடக்குமுறையைக் கையாள்பவர் யாராக இருந்தாலும் இது பொருந்தும் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் இஸ்லாமிய சமயம் உலக அமைதிக்கு முன்னுரிமை கொடுப்பதை நூல் சுட்டுகிறது.

சோகம், வேதனை போன்ற மனித உணர்வுகளையும் இஸ்லாம் அடையாளம் காண்பதாக நூலில் குறிப்பட்டுள்ளது.

இத்தகைய உணர்வுகளை சரியான வகையில் வெளிப்படுத்துமாறு முஸ்லிம்களுக்கு வழிகாட்டிக் கையேடு ஊக்குவிக்கிறது.

காஸாவில் நடந்து வரும் நெருக்கடிநிலையை முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய நெறிமுறைகளைக் கொண்டு அணுக வேண்டும் என்று முயிஸ் அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்