அக்டோபரில் மூலாதாரப் பணவீக்கம் 3.3%ஆகப் பதிவானது

2 mins read
1c562c9f-3323-4637-aad6-4e851845df50
சிங்கப்பூரில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக மெதுவாக அதிகரித்த பொருள்களின் விலை அக்டோபரில் விரைவாக அதிகரித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அக்டோபர் மாதம், மூலாதாரப் பணவீக்க விகிதம் 3.3 விழுக்காடு உயர்ந்தது.

நவம்பர் 23ஆம் தேதி வெளியான புள்ளிவிவரங்கள் அதைக் காட்டுகின்றன.

மூலாதாரப் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கு, சேவை, சில்லறை விற்பனைத் துறைகளில் பணவீக்கம் அதிகரித்ததும் மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரித்ததும் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

செப்டம்பர் மாதம் மூலாதாரப் பணவீக்க விகிதம் 3 விழுக்காடு அதிகரித்தது. அக்டோபரில் அது 3.1 விழுக்காடாக இருக்குமென்று புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர்.

தொடர்ந்து ஐந்து மாதங்களாக, உணவு, எரிபொருள் ஆகியவை தவிர்த்து மற்ற பொருள்களின் விலை மெதுவாக அதிகரித்த நிலையில் அக்டோபரில் விரைவாக அதிகரித்தது.

இவ்வேளையில், ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம், அக்டோபரில் 4.7 விழுக்காடாகப் பதிவானது. ஒப்புநோக்க, செப்டம்பரில் அது 4.1 விழுக்காடாக இருந்தது.

கார்களின் விலை விரைவாக அதிகரித்த நிலையில் தனியார் போக்குவரத்துக்கான பணவீக்கம் அதிகரித்ததை இது காட்டுவதாக வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கூறின.

அக்டோபர் மாதத்தில் தனியார் போக்குவரத்துக்கான பணவீக்கம் ஆக அதிகமாக உயர்ந்தது. செப்டம்பரில் 8.5 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் அக்டோபரில் 11.7 விழுக்காடானது.

சேவைத் துறையிலும் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தைவிட 0.3 விழுக்காடு உயர்ந்து அக்டோபரில் 3.4 விழுக்காடாகப் பதிவானது. விடுமுறைச் செலவினங்கள் மிகவும் உயர்ந்தது இதற்குக் காரணம். துணைப்பாட வகுப்பு உள்ளிட்ட கட்டணங்களும் மருத்துவமனை சேவைக் கட்டணம், வெளிநோயாளிகளுக்கான கட்டணம் போன்றவையும் விரைவாக உயர்ந்தன.

சில்லறை விற்பனைக்கான பணவீக்க விகிதம் அக்டோபரில் 0.7 விழுக்காடு உயர்ந்தது. உடல் பராமரிப்புப் பொருள்கள், மருந்துப் பொருள்களின் வலுவான விலை உயர்வு இதற்குப் பங்களித்தது. ஆடைகள், காலணிகளின் விலை மெதுவாகக் குறைந்ததாகக் கூறப்பட்டது.

மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள் செப்டம்பரைவிட அக்டோபரில் 1.8 விழுக்காடு அதிகரித்தன. முன்னதாக செப்டம்பரில் அவை 1.4 விழுக்காடு சரிந்தன.

இந்த ஆண்டு டிசம்பரில் மூலாதாரப் பணவீக்க விகிதம் 2.5 முதல் 3 விழுக்காடாக இருக்கும் என்று முன்னர் வெளியிடப்பட்ட முன்னுரைப்பை அமைச்சும், ஆணையமும் மீண்டும் உறுதிப்படுத்தின. 2024ஆம் ஆண்டு முழுமைக்கும் அது 2.5 முதல் 3.5 விழுக்காடாகப் பதிவாகும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் சராசரியாக 5 விழுக்காடாக இருக்குமென்றும் அடுத்த ஆண்டு அது 3 முதல் 4 விழுக்காடாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில், பொருள், சேவை வரி உயரும்போது அது மூலாதாரப் பணவீக்க விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கூறின.

இருப்பினும், இறக்குமதி விலை நெருக்கடி குறையும் என்பதாலும் ஊழியர் சந்தை நெருக்கடி தொடர்ந்து தளரும் என்பதாலும் அந்தத் தாக்கம் அடுத்த ஆண்டில் மிதமடையும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்