உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்: ஆய்வு

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்: ஆய்வு

2 mins read
c75584d7-7141-4196-aaf0-77cd856abd6d
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா (வலது), பிள்ளைகளின் வளர்ச்சிக்கு தொடக்க ஆண்டுகள் முக்கியப் பங்களிப்பதாகக் கூறினார். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் சூழலில் வளரும் பிள்ளைகளை, அவர்களோடு பயிலும், வசதியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சமமாகக் கொண்டுவருவதற்கு செய்யப்படும் முதலீடு பல மடங்கு நன்மையளிப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய ஒவ்வொரு குழந்தைக்கும் சராசரியாக ஐந்து ஆண்டுகளில் $20,000 செலவிடப்படுகிறது.

சமூக சேவையாளர்கள், பிள்ளைகளின் கற்றல் சவால்களையும் நடத்தையையும் புரிந்துகொண்டு அவர்கள் குறைகளை வென்று சாதிக்க உதவும் கற்றல் நிபுணர்கள், சுகாதார வல்லுநர்கள் ஆகியோர் மூலம், உதவி தேவைப்படும் சூழலில் வளரும் பிள்ளைகள் தொடக்கப் பள்ளியில் சேர்வதற்கு முன்பே அவர்கள்மீது கவனம் செலுத்தப்படுகிறது.

இத்தகைய பிள்ளைகள் வளர்ந்து பணியாற்றக்கூடிய 45 ஆண்டுகளில் அவர்களது சம்பாதிக்கும் ஆற்றலை $136,000 கூடுதலாக ஈட்டும் வகையில் அதிகரிக்க அது உதவுகிறது.

‘கேர் கார்னர் சிங்கப்பூர்’ அமைப்பு பத்து ஆண்டுகளாக மேற்கொள்ளும் ‘சர்க்கிள் ஆஃப் கேர் (சிஓசி)’ திட்டம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

2022ஆம் ஜூலை முதல் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை ‘ரிசர்ச் ஃபார் இம்பேக்ட்’ எனும் உள்ளூர் நிறுவனம் அந்த ஆய்வை நடத்தியது.

ஆய்வில், சிஓசி திட்டத்தில் இடம்பெற்றுள்ள 146 பெற்றோர்களில் 85 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர், தங்கள் பிள்ளைகளின் பொதுவான கல்வித் திறனும் வாழ்க்கை, சமூகத் திறன்களும் மேம்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

பெற்றோரும் தங்கள் ஊக்கமும் தன்னம்பிக்கையும் மேம்பட்டுள்ளதாகக் கூறினர். தங்கள் கனவை நனவாக்கும் வகையில் பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் திறனும் மேம்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், குடும்ப வன்முறை, சிறார் மீதான வன்முறை ஆகிய சிக்கல்கள் உள்ள குடும்பங்களின் பிள்ளைகள் சிஓசி திட்டத்தின் மூலம் ஆகக் குறைவான நன்மையே அடைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்வரை அந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த நேரிட்டது.

நவம்பர் 24ஆம் தேதி கான்கார்ட் ஹோட்டலில் நடைபெற்ற ‘கேர் கார்னர் சிங்கப்பூர்’ அமைப்பின் பாலர் பருவ மேம்பாட்டுக் கருத்தரங்கில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, பிள்ளைகளின் வளர்ச்சிக்கு, தொடக்க ஆண்டுகள் முக்கியம் என்று கூறினார். ஆனால் உதவி தேவைப்படும் பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கு அதற்கு உகந்த சூழல் அமைவதில்லை என்றார் அவர்.

“இத்தகைய குழந்தைகளுக்கு, வாழ்க்கையின் தொடக்க காலகட்டத்தில் உதவி செய்யாவிட்டால், காலம் செல்லச்செல்ல, அவர்களுக்கும் வசதியான குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்லும்,” என்று திரு சுவா குறிப்பிட்டார்.

நாட்டின் சமூக-பொருளாதார நிலவரத்தை வலுப்படுத்த சிறு குழந்தைகளின் தொடக்க காலத்திலே அதற்கான முயற்சியைத் தொடங்குவது முக்கியம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்