கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 13 மாதமே ஆன ஆண் குழந்தை அக்டோபர் 12ஆம் தேதி இறந்தது. இவ்வாண்டில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை இறந்தது இதுவே முதல் முறை.
சிஎன்ஏ விளக்கம் கேட்டபோது, அந்த குழந்தைக்கு கொவிட்-19 தடுப்பூசி போடவில்லை என்றும் கடுமையான பிறவிக் குறைபாடு பின்னணி அக்குழந்தைக்கு இருந்தது என்றும் சுகாதார அமைச்சு விளக்கமளித்தது.
2023 அக்டோபர் 10ஆம் தேதி குழந்தைக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே நாளில் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
“குழந்தை, 2023 அக்டோபர் 12ஆம் தேதி மரணமடைந்தது. தீவிர கொவிட்-19 தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளது. பிறவிக் குறைபாடும் மரணத்துக்கு காரணமாகும்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாண்டில் கொவிட்-19 தொற்றுக்குப் பலியான முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தை என்பதை அமைச்சு உறுதி செய்தது.
கடந்த ஆண்டில் மூன்று குழந்தைகள் கொவிட்-19க்கு உயிரிழந்தன. இதற்கு முன்பு 2020 அல்லது 2021ல் ஒரு குழந்தையும் கொவிட்-19க்கு இறக்கவில்லை.
இளம் குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்றால் ஏற்படக்கூடிய ஆபத்து வயதானவர்களைவிட குறைவு. ஆனால் கடுமையான விளைவுகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். ஏற்கெனவே மருத்துவ பிரச்சினைகளும் கொவிட்-19 தடுப்பூசி போடாமலும் இருந்தால் ஆபத்து அதிகம் என்று அமைச்சு கூறியது.
ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் இந்நாள் வரை தேவையான பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டிருப்பது நல்லது என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த அக்டோபரில் கொவிட்-19 தடுப்பூசிக்கான பரிந்துரைகளை சிங்கப்பூர் புதுப்பித்தது.
அதன்படி ஆறு மாதங்கள் முதல் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 2023 அல்லது 2024ல் கூடுதல் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு தகுதியுடையவர்கள் கூடுதல் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

