சிங்கப்பூர் சீலாட் சம்மேளனத் தலைமை நிர்வாக அதிகாரி கைது

2 mins read
1ef4d9e1-f943-48d9-b47c-045cc5eac39f
சிங்கப்பூரின் சீலாட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‌ஷேக் அலாவ்’தீன். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூர் சீலாட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் சிலாட் தற்காப்புக் கலையின் முன்னாள் உலக விருது வெற்றியாளருமான ‌‌ஷேக் அலாவ்’தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த அமைப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளின் தொடர்பில் வர்த்தக விவகாரப் பிரிவு மேற்கொள்ளும் விசாரணையில் ‌ஷெய்க் ஒத்துழைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌ஷெய்க் நம்பிக்கை துரோகம் (கிரிமினல் பிரீச் ஆஃப் டிரஸ்ட்) இழைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று சிங்கப்பூர் காவல்துறை குறிப்பிட்டது.

அவர் வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை சொன்னது.

சண்டே டைம்சின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் காவல்துறை அவ்வாறு பதிலளித்தது. விசாரணை தொடர்வதால் இதுகுறித்து மேல்விவரங்கள் வழங்கப்படவில்லை.

‌‌ஷேக் கைது செய்யப்பட்டதை சிங்கப்பூர் சீலாட் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். வர்த்தக விவகாரப் பிரிவின் விசாரணையில் சம்மேளனம் ஒத்துழைக்கத் தயாராய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில பயிற்றுவிப்பாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்ட முறையின் தொடர்பில் தனது நிதி இயக்குநர்மீது சிங்கப்பூர் சீலாட் சம்மேளனம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் காவல்துறையிடம் புகார் கொடுத்தது. அந்த நிதி இயக்குநர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மார்ச் மாதம் பதவி விலகினார்.

அந்த காலகட்டத்தில் சம்மேளனத்தின் நிதி நடவடிக்கைகளில் முறைகேடுகள் இருப்பதாக ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு தன்னிடம் தெரியப்படுத்தியதாக அது குறிப்பிட்டது. பிரச்சினை கவலை தரும் வண்ணம் இருப்பது அதற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தனது நிறுவன நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து செயல்பாட்டு முறையை வலுப்படுத்தப்போவதாக சிங்கப்பூர் சிலாட் சம்மேளனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்