வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் சிங்கப்பூரர்களின் குடும்பக் கடன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. புதிதாகக் கடன் வாங்குவதை சிங்கப்பூரர்கள் தவிர்ப்பதாகவும் ஏற்கெனவே இருந்த கடன்களை அடைக்க வலுவான வருமான வளர்ச்சி உதவியதாகவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த குடும்பக் கடன்கள் தொடர்ந்து எட்டாவது காலாண்டாகக் குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குடும்பக் கடன்கள் சரிவு கண்டுள்ளதாக ஆணையம் கூறியது.
கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து கூடுதல் கடன்கள் வாங்குவது குறித்து சிங்கப்பூர் குடும்பங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதாக ஆணையம் கூறியது. வட்டி விகிதம் அதிகரிப்பு இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வட்டி விகிதங்கள் சிங்கப்பூர் ஓவர்னைட் விகித சராசரியைக் கொண்டு அளவிடப்படுகின்றன. வீட்டுக் கடன் வட்டி விகிதங்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டின் பிற்பாதியில் இந்த விகிதம் 3.5 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்தது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த விகிதம் 0.5 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தது.
ஆக அதிகமாகத் தனிநபர் கடன்கள் குறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த குடும்பக் கடன்களில் நான்கில் ஒரு பகுதியாகும்.
வருமான வளர்ச்சியும் கூடுதல் சேமிப்புகளும் குடும்பங்களில் கடன் அடைப்பு விகிதத்தை அதிகரித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
குடும்பங்களில் நிதி மீள்திறனை உறதிசெய்ய மத்திய வங்கி சில சோதனைகளை நடத்தியது.
கடன் வாங்கியோர் மிக மோசமான பொருளியல் சூழலில் எவ்வாறு சமாளிப்பர் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, கூடுதல் விலையுள்ள வீடுகளுக்காக கடன் வாங்குவோரில் பெரும்பாலானோரால் வட்டி விகிதம் அதிகரித்தாலோ அல்லது சம்பளம் குறைந்தாலோ மாதாந்திரத் தொகையைச் செலுத்த முடியும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், ஒரு சிலரால் கடன் தொகையை நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் செலுத்த முடியாமல் போகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்குவதில் எச்சரிக்கை தேவை என்று மத்திய வங்கி வலியுறுத்துகிறது.
இதற்கிடையே, ஒட்டுமொத்த குடும்பக் கடன்களில் நான்கில் மூன்று பங்கு வகிக்கும் வீட்டுக் கடன் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் மூன்றாம் காலாண்டில் அது 1 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

