சிங்கப்பூரில் ஆய்வுத்துறையில் உபகாரச் சம்பளம் பெற்றவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்மரைக் கொண்ட குழு அவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
ஆய்வுத்துறைத் திறனாளர்கள், ஆய்வுத்துறையில் உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கையையும் அவர்களில் எத்தனை பேர் சிங்கப்பூரிலேயே தங்குகின்றனர் என்பதையும் அரசாங்கம் கண்காணிக்கவேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது நடப்பில் உள்ள திட்டங்கள், அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளை ஊக்குவிக்கும் சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்கம், தொழில்நிறுவனத் திட்டங்களுக்கு (ஆர்ஐஇ) ஏற்ப இருப்பதை உறுதிசெய்ய அது உதவும்.
திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் அது கைகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளில் இவையும் அடங்கும்.
சிங்கப்பூரில், கடந்த 20 ஆண்டுகளில் ஆய்வுத்துறையில் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
2000ஆம் ஆண்டில் இங்கு ஆய்வாளர்களின் எண்ணிக்கை 20,000ஆக இருந்தது. 2020ல் அது 46,000ஆகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கச் செலவினங்களை ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு, அதன் பரிந்துரைகள் அடங்கிய 57 பக்க அறிக்கையை நவம்பர் 27ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் தலைமை வகிக்கும் அந்தக் குழுவில், மக்கள் செயல் கட்சியின் மேலும் ஆறு உறுப்பினர்களுடன் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் திரு ஜேமஸ் லிம்மும் இடம்பெற்றுள்ளார்.
மே மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் பல்வேறு அம்சங்கள் குறித்து அக்குழுவினர் கலந்துரையாடினர். வரவுசெலவுத் திட்டம் 2023, ஹெல்தியர் எஸ்ஜி திட்டம், சிங்கப்பூரின் பருவநிலை மீள்திறனைப் பாதுகாத்தல், ‘ஆர்ஐஇ2025’ திட்டம் ஆகியவை குறித்து அவர்கள் மதிப்பிட்டனர்.
சிங்கப்பூரில் ஆர்ஐஇ தொடர்பான பல முதலீடுகள் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டிய மதிப்பீட்டுக் குழு, இதற்கான நிதியைத் தரும் அரசாங்க அமைப்புகள் அவை நம்பகமான முறையிலும் சரியாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

