‘ஹெட்ஜ் ஃபண்ட்’ நிறுவனமான ‘சிட்டடெல்’ முதலாளி, அண்மையில் தம்முடைய ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ‘தோக்கியோ டிஸ்னிலேண்ட்’ உல்லாசத் தலத்திற்குச் சென்று வருவதற்கான செலவை தானே ஏற்றுக்கொண்டார்.
2020ல் நிறுவனத்தின் 30வது ஆண்டு நிறைவையும் கடந்த ஆண்டு அதன் துணை நிறுவனமான ‘சிட்டடெல் செக்யூரிட்டிஸ்’இன் 20வது ஆண்டு நிறைவையும் கொண்டாட அதன் தலைமை நிர்வாக அதிகாரி கென் கிரிஃபின் விரும்பினார். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அக்கொண்டாட்டம் தள்ளிப்போனது.
ஹாங்காங், சிங்கப்பூர், சிட்னி, ஷாங்காய், தோக்கியோ, குருகிராம் ஆகிய பகுதிகளில் உள்ள இரு நிறுவனங்களின் ஆசிய பசிபிக் அலுவலகங்கள் பணிபுரியும் சுமார் 1,200 ஊழியர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் ‘தோக்கியோ டிஸ்னி ரிசார்ட்’ உல்லாசத் தலத்திற்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதுபோன்ற தாராளமான செயல்கள் ஊழியர்களுக்கு மட்டுமன்று முதலாளிகளுக்கும் பலன் தருவதாக மனிதவள நிபுணர்கள் கூறுகின்றனர். ஊழியர்களை உற்சாகப்படுத்த இவை சக்தி மிகுந்தவை என்று அவர்கள் சொல்கின்றனர்.
மேலும், அத்தகைய நிறுவனங்களில் புதிதானவர்கள் சேர இத்தகைய நடவடிக்கைகள் ஈர்ப்பு சக்தியாக விளங்கும் என்று ‘மேன்பவர்குரூப் சிங்கப்பூர்’ மேலாளர் லிண்டா டியோ சொன்னார்.
“வேலையில் தங்களது பங்களிப்புகளை அங்கீகரிக்க முதலாளிகள் எடுக்கும் முயற்சியாக ஊழியர்கள் இதைப் பார்க்கின்றனர்,” என்றார் அவர்.
இத்தகைய பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவம், நிறுவனத்துக்குச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற ஓர் உணர்வை ஊழியர்களிடம் ஏற்படுத்தும் என்றும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

