சமூக ஊடகங்களில், இந்த வட்டாரத்தினர், சிங்கப்பூருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிடும் போக்கு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் தொடங்கிய பிறகு இவ்வாறு பதிவாகும் கருத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளையும் இஸ்ரேலையும் ஆதரிக்கும் நாடாக சிங்கப்பூரைக் கருதுவோர் இவ்வாறு கருத்துகளைப் பகிர்வதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
“சிலர், பாலஸ்தீன நிலப்பகுதியில் இஸ்ரேலின் இருப்பைக் குறிப்பிட்டு அதுபோல் மலாய் நிலப்பகுதியில் சிங்கப்பூர் இருப்பதாகப் பதிவிட்டுள்ளனர். உந்துகணைகளையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி சிங்கப்பூரைத் தாக்கவேண்டும் என்றும் சிலர் இணையத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
உள்துறைக் குழுவின் அதிகாரிகளுக்கு தேசிய தின விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
அனைத்துலக அளவில் செயல்படும் அல்-காய்தா, ஐஎஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்களும் காஸாவில் அண்மையில் நிலவும் நெருக்கடியைச் சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் தாக்குதல் அழைப்புகளை முன்வைக்கின்றன.
“மிரட்டல் நிலவுகிறது, முன்பைவிட அதிகமான அச்சுறுத்தல் நிலவுகிறது,” என்றார் அமைச்சர் சண்முகம்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் மேற்கொண்ட தாக்குதல், மிகப் பெரிய திட்டமிடலையும் ஒருங்கிணைப்பையும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் ஆயுதங்களும் குறைவான திறன்கொண்டவை.
தொடர்புடைய செய்திகள்
இருந்தபோதும் அந்தத் தாக்குதல், உயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கும் இஸ்ரேலை வியப்பில் ஆழ்த்தியது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இதிலிருந்து சில பாடங்களைக் கற்கலாம் என்றார் திரு சண்முகம்.
அத்தகைய தாக்குதல் எங்கு வேண்டுமானாலும் நடத்தப்படக்கூடும். சிங்கப்பூரிலும் நடத்தப்படக்கூடும். அவ்வாறு தாக்குதல் நடத்த சிலர் ஊக்குவிக்கப்படலாம் என்பதை அவர் சுட்டினார்.