கூட்டுரிமை வீடு மறுவிற்பனை சற்றே ஏற்றம்

கூட்டுரிமை வீடு மறுவிற்பனை சற்றே ஏற்றம்

2 mins read
968b4012-e05e-4d06-92f1-5814eca814a7
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்தது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக அவற்றுக்கான விலை சிறிதளவு கூடியது.

செப்டம்பர் மாதத்துடன் ஒப்புநோக்க, மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் விலை 0.4 விழுக்காடு அதிகரித்தது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முறையே அது 0.9%, 0.8%ஆகப் பதிவானது.

சொத்துச் சந்தை நிறுவனங்களான 99.கோ, எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றின் இணையவாசல்களில் வெளியான முன்னோடித் தரவுகள் அதைத் தெரிவித்தன.

அக்டோபர் மாதம் மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் விகிதம் 14.7 விழுக்காடு அதிகரித்தது.

ஒட்டுமொத்தத்தில், சென்ற ஆண்டு அக்டோபரைவிட இவ்வாண்டு அக்டோபரில் கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை விலை 7.5 விழுக்காடு கூடியது.

மத்திய வட்டாரத்தின் முக்கியப் பகுதி தவிர்த்து இதர இடங்களில் மறுவிற்பனை செய்யப்படும் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவை வலுவாக இருப்பதாக சொத்துச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அவ்வீடுகளின் விலை விரைவில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வட்டாரத்தின் முக்கியப் பகுதியில் வீடு வாங்கத் திட்டமிடும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டினரிடையே, ‘ஏபிஎஸ்டி’ எனப்படும் கூடுதல் முத்திரைத் தாள் வரி தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அவ்வட்டாரத்தில் அக்டோபர் மாதம் இத்தகைய 838 வீடுகள் கைமாறியதாக முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பரில் 731 கூட்டுரிமை வீடுகள் மட்டுமே மறுவிற்பனை செய்யப்பட்டன.

வரும் மாதங்களில் மறுவிற்பனை வீட்டு விலை மிதமான வளர்ச்சி காணும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

‘ஏபிஎஸ்டி’ வரி, அதிகரித்துள்ள வட்டி விகிதம், பொருளியல் நிச்சயமற்றதன்மை ஆகியவற்றோடு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ‘பிடிஓ’ திட்டத்தின்கீழ் விற்பனைக்கு விடும் வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும் அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்