ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகே, கரையோரப் பாதுகாப்புக்காக நிலமீட்புப் பணிகளை மேற்கொள்வது சரியான அணுகுமுறை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் நீண்டகாலத் தேவைகளை ஈடுகட்டவும் அது உதவும் என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
அடுத்த பத்தாண்டுகளில் ‘லாங் ஐலண்ட்’ எனப்படும் நிலப்பகுதியை உருவாக்கும் திட்டங்கள் குறித்து அரசாங்க அமைப்புகள் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வல்லுநர்களின் கருத்து வெளிவந்துள்ளது.
சுற்றுச்சூழல், பொறியியல் ஆய்வுகளை அதிகாரிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக நவம்பர் 28ஆம் தேதி, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
நிலமீட்புப் பணி மூலம் கிட்டத்தட்ட 800 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்மட்ட உயர்விலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பகுதியைப் பாதுகாக்க அது உதவும். மேலும், வளர்ச்சிப் பணிகளுக்கும் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்கவும் அந்த நிலப்பகுதி பயன்படும்.
எதிர்கால நிலத் தேவையும் கடல்மட்ட உயர்வுக்கு எதிரான பாதுகாப்பும் இந்த நிலமீட்புத் திட்டத்திற்கான இரு உந்துசக்திகள் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் யோங் குவெட் யூ குறிப்பிட்டார். இந்த இரு அம்சங்களுமே நீண்டகாலத் தீர்வை எதிர்நோக்குபவை என்றார் அவர்.
நிலமீட்புப் பணி மூலம் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது பொருளியல் ரீதியாக நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கரையோரப் பாதுகாப்பு வல்லுநர் குழுவின் தலைவருமான பேராசிரியர் யோங், ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடற்கரை அரிப்பால் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். கடல்மட்டம் உயர்ந்தால் அங்கு நிரந்தரமாக வெள்ளம் ஏற்பட்டு நிலப்பகுதியை இழக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
இருப்பினும், நிலமீட்புப் பணிகளால் அந்த வட்டார பல்லுயிர்ச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கடல்துறை நடவடிக்கைகளை மிகக் குறைந்த அளவிலேயே அங்கு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கரையோரத்தில் சுவர் கட்டப்படும்போது, கடற்படுகையின் மண்ணை அகழ்வதைத் தடுக்கும் வகையில் புத்தாக்கமிக்க நிலமீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு ஜியன் வலியுறுத்தினார்.
நிலமீட்பின்போது பவளப் பாறைகளுக்கு அருகில் உள்ள இடங்களைத் தவிர்த்தல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

