நாய்களுக்குப் பயிற்சி, பகல்நேரப் பராமரிப்பு வழங்கும் ‘கே9 கனெக்ஷன்’ எனும் நிலையத்தின் இயக்குநரான மேத்யூ இங் சாவ்ஹுய் மீது, நவம்பர் 29ஆம் தேதி, விலங்குவதை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, மெக்பர்சன் ரோட்டில் உள்ள நிலையத்தில், இரவு 10.45 மணியளவில் கலப்பின நாய் ஒன்றை உலோகப் பாத்திரத்தால் அவர் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து இங்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணொளியில் காணப்பட்டது அவர்தானா என்பதையோ அதில் துன்புறுத்தப்பட்ட நாயின் தொடர்பில்தான் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டதா என்பதையோ நீதிமன்ற ஆவணங்கள் உறுதிப்படுத்தவில்லை.
2022 ஜூலையில், ‘கே9 கனெக்ஷன்’ நிலையத்தில் இடம்பெற்ற விலங்குவதைச் சம்பவம் தொடர்பில் ‘ஏவிஎஸ்’ எனப்படும் விலங்கு நல, கால்நடை மருத்துவச் சேவை அமைப்பு விசாரணை நடத்துவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
2022 மார்ச் மாதம் முதல் அங்கீகரிக்கப்பட்ட நாய்ப் பயிற்சி நிலையப் பட்டியலிலிருந்து அந்நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விலங்குகளைக் கொடுமைப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் இங்கிற்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் $40,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.


