காஸாவில் அவசர உதவிப்பொருள்களை விநியோகிக்க சிங்கப்பூர் ஆகாயப்படை விமானம்

2 mins read
1cc13a89-9abb-44cf-a85b-550e67e7d336
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் எம்ஆர்டிடி எனப்படும் பலதிறன் போக்குவரத்து விமானம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காஸாவில் துயரப்படும் மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூரர்கள் கருணை உள்ளத்துடன் ரொக்கமாகவும் நன்கொடையாகவும் $7 மில்லியனுக்கும் மேல் அளித்து உதவி உள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரக்கப்படும் சிங்கப்பூரர்கள் தங்களது மனப்பூர்வ ஆதரவைத் தெரிவிக்க முன்வந்துள்ளனர்.

காஸா மக்களுக்கான அவசரத் தேவையாக, உயிர்காப்புப் பொருள்களை விநியோகிக்க சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானம் ஒன்றை சிங்கப்பூர் அரசாங்கம் அனுப்பி உள்ளது. எம்ஆர்டிடி எனப்படும் அந்த பலதிறன் போக்குவரத்து விமானம், சாங்கி விமானத் தளத்தில் (கிழக்கு) இருந்து 30 நவம்பர் (வியாழக்கிழமை) அதிகாலை எகிப்துக்குப் புறப்பட்டது.

உணவுப்பொருள்கள், மருந்துகள், மருத்துவ விநியோகப் பொருள்கள், போர்வைகள், சுகாதாரப் பொருள்கள், தண்ணீர் வடிகட்டிகள் போன்றவை அடங்கிய உதவித்தொகுப்பை சுமந்து அந்த விமானம் சென்றது.

சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம், மெர்சி ரிலீஃப், ரிலீஃப் சிங்கப்பூர் போன்ற அரசு சாரா அமைப்புகள் இவற்றை வழங்கி உள்ளன.

இந்தப் பொருள்களில் எவை மிகவும் அவசியமானவை என்பதைத் தீர்மானிக்க எகிப்திய ரெட் கிரசென்ட் அமைப்பை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஈடுபடுத்தி உள்ளது.

இந்த உதவியை இதற்காக இணைந்துள்ள அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆர்எச்சிசி எனப்படும் சாங்கி வட்டார மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒத்துழைப்பு மையம் ஈடுபட்டு உள்ளது.

இது, காஸாவுக்கான சிங்கப்பூர் அரசாங்கத்தின் இரண்டாவது தவணை உதவியாகும்.

மனிதாபிமான உதவிப்பொருள்களை எடுத்துச் செல்லும் சிங்கப்பூர் ஆகாயப் படை வீரர்களை வழியனுப்ப வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முஹம்மதுவும் சாங்கி விமானத் தளம் (கிழக்கு) சென்றிருந்தனர்.

சிங்கப்பூருக்கான எகிப்திய தூதராகப் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும் அஹமது மெஸ்தாஃபா அப்தெலால் முஹமது, பாலஸ்தீன அதிகாரத்துவ வட்டாரத்துக்கான சிங்கப்பூர் பிரதிநிதி ஹவாஸி டைப்பி மற்றும் உதவி நடவடிக்கைகளில் இணைந்துள்ள அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் விமானத் தளத்துக்குச் சென்றனர்.

விமானம் எகிப்து சென்று சேர்ந்ததும் அங்குள்ள சிங்கப்பூர் தூதர் டொமினிக் கோ, உதவித்தொகுப்புகள் எகிப்திய ரெட் கிரசென்ட் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவதைப் பார்வையிடுவார்.

போர் காரணமாக காஸாவில் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள சிங்கப்பூரர்கள், நிதிதிரட்டுக்கு மனமுவந்து ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்