சுவா சூ காங் நகர மன்றம் தவிர்த்து சிங்கப்பூரின் மற்ற 16 நகர மன்றங்களும், நவம்பர் 30ஆம் தேதி வெளியான அண்மைய நகர மன்ற அறிக்கையில், உயர் தரக்குறியீட்டைப் பெற்றுள்ளன.
சுவா சூ காங் நகர மன்றம் மட்டும் குறைவான தரக்குறியீட்டைப் பெற்றுள்ளது.
நகர மன்றங்களின் செயல்பாடுகள் வருடாந்தர அறிக்கையில் மதிப்பிடப்படும்.
நகர மன்றச் சட்டத்தின்கீழ் இரு சம்பவங்களில் பொருந்தாத நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் குடியிருப்புப் பேட்டை நிர்வாகம் தொடர்பான அக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இரு சம்பவங்களிலும், தேசிய வளர்ச்சி அமைச்சரின் ஒப்புதலைப் பெறாமல், சுவா சூ காங் நகர மன்றம், பொதுச் சொத்து இடம் அல்லாத இடத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டதுடன் அதற்கான நிதியையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் நடைபெற்ற பணிகள் என்று குறிப்பிடப்பட்டு பின்னர் அந்தப் பணிகளுக்கான ஒப்புதல் அமைச்சரிடம் பெறப்பட்டது.
இருமுறை அத்தகைய விதிமீறல் இடம்பெற்றதால், தேசிய வளர்ச்சி அமைச்சு அதை மிதமான தீவிரமுடையதாகக் கருதுகிறது. அதன் விளைவாக சுவா சூ காங் நகர மன்றத்திற்கு குறைவான தரக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 16 நகர மன்றங்களுக்கும் ‘பச்சை’ தரக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றில் நான்கு நகர மன்றங்களில், நகர மன்றச் சட்டத்தை மீறிய சிறிய அளவிலான சம்பவங்கள் இடம்பெற்றன. அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம், ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றம், ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம், மார்சிலிங்-யூ டீ நகர மன்றம் ஆகியவை அவை.
அந்த நகர மன்றங்களில் முதல்முறையாக அந்தக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் அவை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது. இதன் தொடர்பில் அந்த நான்கு நகர மன்றங்களுக்கும் 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.
வழக்கமாக, நகர மன்றச் சட்டத்தின்கீழ் கடுமையான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலான புள்ளிகள் வழங்கப்படும்.
ஒரு புள்ளிக்குக் குறைவாகப் பெற்ற நகர மன்றங்களும் ‘பச்சை’ தரக்குறியீட்டுக்குத் தகுதிபெறும். ஒன்று முதல் இரண்டுக்குக்கீழ் புள்ளிகள் பெற்றால் ‘ஏம்பர்’ தரக்குறியீடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்றால் சிவப்புத் தரக்குறியீடும் வழங்கப்படும்.
குடியிருப்புப் பேட்டை நிர்வாகம் தொடர்பிலான இந்த வருடாந்தர அறிக்கை, ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில் நகர மன்றங்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டது.


