தொழில்முனைப்பைக் காட்டிலும் பரம்பரையாக வரும் சொத்துகளே புதிய பெரும் பணக்காரர்களை உருவாக்குகிறது என்று சுவிட்சர்லாந்தின் யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 12 மாத காலகட்டத்தில் பெரும் பணக்காரர்களான 137 பேரில் 53 பேர் பரம்பரை சொத்தாக அமெரிக்க டாலர் 150.8 பில்லியன் (S$201.8 பில்லியன்) பெற்றனர்.
இது அதே காலகட்டத்தில் சுயமாக சம்பாதித்து அமெரிக்க டாலர் 140.7 பில்லியன் சேர்த்த 84 பெரும் பணக்காரர்களைவிட அதிகமானது என்று அந்த யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து சஞ்சிகையான ‘யுபிஎஸ் பில்லியனேர் எம்பிஷன்ஸ் ரிப்போர்ட்’ என்ற அறிக்கையின்படி இதுவே பரம்பரையாக சொத்து சேர்த்தவர்கள் தொழில்முனைப்பின் மூலம் சேர்த்த சொத்தைவிட அதிகம் என்று அது குறிப்பிட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து சஞ்சிகையின் இவ்வாண்டு அறிக்கை அதன் ஒன்பதாவது அறிக்கையாகும்.
தற்பொழுது தெரிய வந்துள்ள அடுத்த தலைமுறைக்கான பரம்பரை சொத்து விகிதம் ஒரு சிறிய அளவுதான் என்றும் பல செல்வந்தர்கள் முதியவர்களாகி வரும் நிலையில் அவர்கள் தங்கள் பொறுப்புகளை தங்கள் வாரிசுகளிடம் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் விளக்கமளித்துள்ளது.
“அடுத்த 20லிருந்து 30 ஆண்டு காலத்தில் இன்றிருக்கும் 1,000க்கும் மேலான பெரும் செல்வந்தர்கள் தங்கள் வாரிசுக்கு அமெரிக்க டாலர் 5.2 டிரில்லியனை அளிக்க உள்ளனர்.
“இந்த எண்ணிக்கை எப்படி வந்தது என்று கேட்கிறீர்களா? அதற்கான பதில், இன்று 70 வயதைத் தாண்டியிருக்கும் 1,023 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பை கூட்டியதில் கிடைத்தது,” என்று அந்த சுவிஸ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வாரிசுகள் தங்கள் பெற்றோரின் வர்த்தகங்கள், முதலீடுகள், அறநிறுவனங்கள் போன்றவற்றைப் பெறுகின்றனர். அந்த வாரிசுகள் தங்கள் விருப்புகள், திறன்கள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கைத் தொழிலை அமைத்துக்கொள்கின்றனர்.
இவர்கள் புத்தாக்க தொழில்நுட்பங்கள், பசுமை எரிசக்தி உருமாற்றம் ஆகியவற்றுடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீடுகளில் கவனம் செலுத்துவதாகவும் அந்த சுவிஸ் வங்கி கூறுகிறது.

