பொதுக் கழிவறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பலகாலமாகவே சவாலாக இருந்துவரும் நிலையில் அவர்களுக்கு இயந்திர மனிதன் (ரோபோ) அடுத்த ஆண்டில் கைகொடுக்கவுள்ளது.
தானியங்கி ரோபோ கழிவறையை வலம்வந்து, அகற்றவேண்டிய கறைகளையும் சுத்தம் செய்யவேண்டிய பகுதிகளையும் உணரிகளின் துணைகொண்டு கண்டறிந்திடும்.
விடாப்பிடியான கறைகள், பாக்டீரியா போன்றவற்றை அகற்ற உடனே அந்த ரோபோ அதன் சுழலும் கையில் தேவையான சுத்தம் செய்யும் கருவியை எடுத்துக்கொண்டு வேலையைத் தொடங்கிவிடும்.
சுத்தம் செய்வதற்காக மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பாதி மட்டுமே இந்த ரோபோவுக்குத் தேவைப்படும் என்று ரோபோவை உருவாக்கிய ‘ஹைவ்பாட்டிக்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு துவான் டங் குயென், 23, குறிப்பிட்டார்.
இதனால், மனிதத் துப்புரவாளர்கள் வேறு பணிகளில் கவனம் செலுத்தலாம் என்றும் இவர் சுட்டினார்.
‘அப்லுவா’ என்ற இந்த ரோபோ திட்டம், 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் ஜூரோங் நகராண்மைக் கழகமும் இத்திட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளன.
தொழில்துறைப் பேட்டைகள், மருத்துவமனைகள், கடைத்தொகுதிகள், விமான நிலையம் ஆகிய இடங்களில் இந்த ரோபோ திட்டம் முன்னோட்டம் கண்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலையில் வர்த்தக ரீதியாக இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்படும் என்று திரு குயென் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நிறுவனத்தின் இணை நிறுவனர்களான திரு குயெனும் 26 வயது ரிஷப் பட்வாரியும் என்யுஎசில் பயின்றபோது நண்பர்களாகினர்.
துப்புரவுத் தொழிலை நடத்தும் திரு ரிஷப்பின் நண்பர், பணியாள்கள் பற்றாக்குறையால் தாமே சுத்தம் செய்ய வேண்டியிருந்தபோது குயென்னுக்கும் ரிஷப்புக்கும் இந்த ரோபோ திட்டம் குறித்து யோசனை தோன்றியது.
கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியை நன்கு அறிந்திட, திரு குயென் களத்தில் இறங்கியும் உள்ளார். கழிவறைகளைத் தானே சுத்தம் செய்து அதிலுள்ள சவால்களைக் கண்டறிந்தார்.
பணியாளர்களை வேலையில் அமர்த்த நிறுவனங்களும் திண்டாடுகின்றன. தாங்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்ய விரும்பவில்லை என்றுகூட ஊழியர்கள் ஒப்பந்தத்தில் கேட்டுக்கொள்வதாக திரு குயென் அறிந்துகொண்டார்.
இந்நிலையில், கழிவறைத் தரைகளைத் துடைக்கவும் கழிவறைத் தொட்டிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் ரோபோவை மேம்படுத்தும் பணிகளில் ஹைவ்போட்டிக்ஸ்’ குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

