2024ன் முதல் காலாண்டில் வர்த்தகம் தொடர்ந்து மீட்சிகாணும்

1 mins read
a29805c0-9d9b-44d8-8bf7-1a69f12df604
சிங்கப்பூர் வர்த்தக கடன் பிரிவின் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சற்றே உயர்ந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வர்த்தக வெற்றி தொடர்பான நம்பிக்கை, தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக மேம்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான சிங்கப்பூர் வர்த்தக கடன் பிரிவின் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு சற்றே உயர்ந்து 4.48 விழுக்காட்டுப் புள்ளிகளாகப் பதிவானது.

இந்த ஆண்டின் (2023) நான்காம் காலாண்டில் அது 4.35 விழுக்காட்டுப் புள்ளிகளாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.73 விழுக்காட்டுப் புள்ளிகளாகப் பதிவான அந்தக் குறியீடு, மூன்றாம் காலாண்டில் 3.98 விழுக்காட்டுப் புள்ளிகளாக இருந்தது.

வர்த்தக நம்பிக்கைக் குறியீடு உள்நாட்டுப் பொருளியலின் வர்த்தக வெற்றி குறித்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

வர்த்தகத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் என 200 பேரிடம் திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது.

விற்பனை அளவு, நிகர லாபம், பொருள்களின் விலை, புதிய கொள்முதல் பட்டியல்கள், பொருள்களின் கையிருப்புப் பட்டியல், வேலைவாய்ப்பு நிலவரம் ஆகிய ஆறு அம்சங்களின் தொடர்பில் அவர்கள் கருத்துரைத்தனர்.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், பொருள்களின் கையிருப்புப் பட்டியலைத் தவிர்த்து ஏனைய ஐந்து அம்சங்களும் விரிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பொருள்களின் விலையும், புதிய கொள்முதல் பட்டியலும் சற்றே உயர்ந்தன. நிகர லாபம் 0.75 விழுக்காட்டுப் புள்ளிகளிலிருந்து 2.24க்கு உயர்ந்தது. மற்ற மூன்று அம்சங்களும், ஆண்டு அடிப்படையில், இறக்கம் கண்டன அல்லது அவற்றில் மாற்றம் ஏதுமில்லை.

சேவைத்துறையில் வர்த்தக நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. மொத்த விற்பனையில் அது மிகவும் நலிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்