குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உணவுச் செலவுகள், போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகியவற்றுக்காக ‘சைல்ட்எய்ட் 2023’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மொத்தம் $2,008,163 நிதியைத் திரட்டியுள்ளனர்.
வருடாந்தர நன்கொடை நிகழ்ச்சியாக ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘த பிசினஸ் டைம்ஸ்’ இரண்டும் இணைந்து இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்த 19வது ‘சைல்ட்எய்ட்’ நிகழ்வில் இசையுடன் கூடிய விருந்து இடம்பெற்றது.
“வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு இடையே, குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது,” என்றார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் ஜெய்மி ஹோ.
சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தில் டிசம்பர் 4ஆம் தேதியன்று 2023 சைல்ட்எய்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.
1930களில் மேடைக்கலைப் பள்ளி ஒன்றில் நடப்பதாக ‘மெஸ்ரா - ஏ மியூசிகல் மிஸ்ட்ரி’ அமைந்திருந்தது.
ஆடல், பாடலுடன் மர்மம் கலந்து இரண்டு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியில், வருகை தந்த விருந்தினர்களும் மர்மத்திற்கு முடிவுகாண ஈர்க்கப்பட்டனர்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் தலைவர் கோ பூன் வான் ஆகியோர் உள்பட அரங்கில் அமர்ந்திருந்த விருந்தினர்களுடன் மேடைக் கலைஞர்கள் உறவாடி, மர்மத்தைத் தீர்க்க உதவி கோரியது ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருந்தது.
நிகழ்ச்சியில் 6 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 50 இளம் நட்சத்திரங்கள், ஆடிப் பாடி தங்களின் அபார நடிப்பை வெளிப்படுத்தி, வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.