மசே நிதி ஓய்வுக்கால, சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளுக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு

2 mins read
076e53f0-6e5f-4054-9184-697a2c6c4e77
2024 ஜனவரி 1ஆம் தேதி முதல், 65 வயதுக்குக் குறைவான மசே நிதி உறுப்பினர்களுக்கு, அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்புத் தொகை, $68,500லிருந்து $71,500க்கு உயர்த்தப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2024ன் முதல் காலாண்டில் மத்திய சேம நிதி (மசே நிதி) சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளுக்கான (எஸ்எம்ஏ) வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.08 விழுக்காடாக உயர்த்தப்படும். தற்போது அது 4.04 விழுக்காடாக உள்ளது.

ஓய்வுக்காலக் கணக்குகளுக்கான (ஆர்ஏ) வட்டி விகிதம், 4 விழுக்காட்டிலிருந்து 4.08 விழுக்காடாக அதிகரிக்கப்படும். அதுவும் 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்குப் பொருந்தும்.

10ஆண்டு-சிங்கப்பூர் அரசாங்கப் பங்குபத்திரங்களிலிருந்து கடந்த 12 மாதங்களில் கிடைத்த வருவாய் அதிகரித்ததால், எஸ்எம்ஏ வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. மத்திய சேம நிதிக் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), சுகாதார அமைச்சு ஆகியவை டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் அவ்வாறு தெரிவித்தன.

2024 முதல், ஆர்ஏ கணக்குகளுக்கான வட்டி விகிதம் எஸ்எம்ஏ கணக்குகளுக்கு ஈடாக காலாண்டு இடைவெளியில் கணக்கிடப்படும்.

சாதாரண கணக்குகளின் (ஓஏ) வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. 2024ன் முதல் காலாண்டில் அது தொடர்ந்து 2.5 விழுக்காடாகவே இருக்கும்.

2024 ஜனவரி 1ஆம் தேதி முதல், 65 வயதுக்குக் குறைவான மசே நிதி உறுப்பினர்களுக்கு, அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்புத் தொகை, $68,500லிருந்து $71,500க்கு உயர்த்தப்படும்.

66 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்புத் தொகையில் மாற்றம் ஏதும் இருக்காது.

முதிய வயதில் மானியத்துடன் கூடிய அடிப்படைச் சுகாதரப் பராமரிப்புத் தேவைகளுக்கான சேமிப்புக்காக அந்தத் தொகை கணக்கிடப்படுகிறது.

வீவக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அது 2.6 விழுக்காடாகவே இருக்கும்.

55க்குக் குறைவான வயதுடைய மசே நிதி உறுப்பினர்களின் கணக்குகளில் உள்ள முதல் $60,000க்குக் கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டித் தொகை வழங்கப்படும். ‘ஓஏ’ கணக்கிற்கு இவ்வாறு அதிகபட்சம் $20,000 மட்டுமே வழங்கப்படும்.

55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்க்கு முதல் $30,000க்கு கூடுதலாக 2 விழுக்காட்டு வட்டித் தொகையும், அடுத்த $30,000க்கு கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டித் தொகையும் வழங்கப்படும். ‘ஓஏ’ கணக்கிற்கு இவ்வாறு வழங்கப்படும் அதிகபட்சத் தொகை $20,000 என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்