சக்கர நாற்காலியில் இருந்த முதியவர் உயிரிழப்பு; கவனக்குறைவாக இருந்த இருவருக்கு அபராதம்

1 mins read
6d48c28f-c37b-47ff-aa87-fdbcbf976094
முதியோரை வேனில் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட மேடைத் தளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படம் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டது. - படம்: சிஎன்ஏ இணையத்தளம்

சக்கர நாற்காலியில் இருந்த 76 வயது முதியவர் ஒருவரை வேன் ஒன்றில் ஏற்றியபோது, சுகாதாரப் பராமரிப்பு உதவியாளரும் வேன் ஓட்டுநரும் கவனக்குறைவாக இருந்துவிட்டனர்.

இதனால், அந்த முதியவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

முதியவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த தங்களின் கவனக்குறைவான செயல் குறித்து இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஆளுக்கு அபராதமாக $10,000 விதிக்கப்பட்டது.

மியன்மாரைச் சேர்ந்த 49 வயது சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் மோ தடார், சிங்கப்பூரரான 67 வயது வேன் ஓட்டுநர் குவா கிம் செங் ஆகிய இருவரும் மூத்தோர் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினர்.

மோ தடார், 49.
மோ தடார், 49. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குவா கிம் செங், 67.
குவா கிம் செங், 67. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்தோர் பராமரிப்பு நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று முதியவர் திரு ஹசான் கர்ச்சி அர்சான் ஓஸ்மான் இருந்த சக்கர நாற்காலியை மோ நகரும் மேடை ஒன்றில் நிறுத்தி வேனுக்குள் ஏற்றும்போது சக்கர நாற்காலியின் சக்கரங்களைப் பூட்டத் தவறிவிட்டார்.

குவாவும் இதைக் கவனிக்கவில்லை. அத்துடன் சக்கர நாற்காலியை இறுகப் பிடிக்கவும் இல்லை.

சக்கர நாற்காலி பின்னோக்கி நகர்ந்து மேடையிலிருந்து விழுந்ததால் முதியவரின் தலையில் பின்பகுதியில் அடிப்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சுயநினைவிழந்த நிலையில் கொண்டு செல்லப்பட்ட முதியவர் தலைக் காயத்தால் அன்றைய தினமே உயிரிழந்துவிட்டார்.

முதியவர் பொதுவாக ஆரோக்கியமானவர் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
முதியோர்அபராதம்உயிரிழப்பு