துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு புருணை செல்கிறார்.
டிசம்பர் 11 முதல் 14ஆம் தேதி வரை அங்கு நடைபெறும் 9வது இளம் தலைவர்களின் திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிங்கப்பூர் அரசியல் நிர்வாகிகள் அடங்கிய பேராளர் குழுவிற்கு அவர் தலைமை தாங்குவார்.
புருணை பட்டத்து இளவரசரும் அந்நாட்டுப் பிரதமர் அலுவலக மூத்த அமைச்சருமான அல்-முஹ்டாடீ பில்லாஹ்வின் அழைப்பை ஏற்று திரு வோங் செல்கிறார்.
திட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பட்டத்து இளவரசருடன் இணைந்து திரு வோங் தலைமை தாங்குவது இது முதல்முறை என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (டிசம்பர் 11) தெரிவித்தது.
2013ஆம் ஆண்டு முதல், இளம் தலைவர்களின் திட்டத்தின்கீழ் நடைபெறும் வருடாந்தர நிகழ்ச்சிகளை சிங்கப்பூரும் புருணையும் சுழற்சி முறையில் ஏற்று நடத்துகின்றன.
சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான சிறப்பு இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் கொண்டிருக்கும் கடப்பாட்டை இத்திட்டம் பிரதிபலிப்பதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது. அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கு இடையில் ஆழமான உறவுகளை ஏற்படுத்தவும் இளம் தலைவர்கள் திட்டம் உதவுவதாகக் கூறப்பட்டது.
துணைப் பிரதமர் வோங்குடன் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அமைச்சர் இந்திராணி ராஜா, மூத்த துணை அமைச்சர்கள் கோ போ கூன், முகமது ஸாக்கி, டான் கியட் ஹாவ் ஆகியோரும் புருணை செல்கின்றனர்.
வருங்காலத்தில் இருதரப்புப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து அவர்கள் புருணை தலைவர்களுடன் கலந்துரையாடுவர்.