பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு, சேதம் ஆகியவற்றை எதிர்கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட நிதிமீது சிங்கப்பூர் கோரிக்கை வைக்காது.
மாறாக, ‘ஏஓசிஸ்’ எனப்படும் சிறிய தீவு நாடுகளின் கூட்டணி அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகள் அதிலிருந்து நிதி உதவி பெற சிங்கப்பூர் உதவும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ திங்கட்கிழமை கூறினார்.
துபாயில் நடைபெறும் ஐநா பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு அங்கிருக்கும் சிங்கப்பூர் வளாகப் பிரிவில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்கரைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அதிக அளவில் முதலீடு செய்துள்ளபோதிலும் அது இந்த நிதியிலிருந்து பலன்பெற முயற்சி செய்யாது என்று விளக்கினார்.
நீண்டகால அடிப்படையில் உயரும் கடல் மட்டப் பிரச்சினையை எதிர்த்துப் போராட குறைந்தது $100 பில்லியன் தேவைப்படும் என்று சிங்கப்பூர் மதிப்பிட்டுள்ளது.
“ஏஓசிஸ் அமைப்பிலுள்ள மற்ற தீவுவாசிகள், எங்கள் சகோதர, சகோதரிகள் பலர் தொழில்நுட்ப திறன் குறைபாட்டால் இந்தப் பிரச்சினையை சமாளிக்க சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
“அவர்கள் இந்த நிதி உதவி பெற நாங்கள் உதவுவோம்,” என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ தெளிவுபடுத்தினார்.
இந்த நிதியம் இழப்பு, சேதம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். இது வளரும் நாடுகளில் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்படுத்திவரும் சேதத்தை ஈடுகட்டுவதற்காக உருவாக்கப்பட்டது.
இதில் வளர்ந்த நாடுகள் குறைந்தது அமெரிக்க டாலர் 70லிருந்து 80பில்லியன் வரை தருவதாக உறுதி அளித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிதியம் முதல் நான்கு ஆண்டுகளில் உலக வங்கி மூலம் செயல்படும்.

