தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை-சிங்கப்பூர் விமானம் 12 மணி நேரம் தாமதம்; 168 பயணிகள் அவதி

2 mins read
930f9c9d-71e3-4913-a284-2d6572f4aa3b
பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னையில் விமானம் புறப்பட ஏறக்குறைய 12 மணி நேரம் தாமதமானதால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 168 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து, மீண்டும் அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.

அதன்படி, விமானம் புதன்கிழமை இரவு குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வந்த அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.

இருப்பினும் வியாழக்கிழமை (டிசம்பர் 14) காலை 6 மணி வரை விமானம் புறப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை.

அதனால், சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த 168 பயணிகளும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் அலுவலகத்தைச் சூழ்ந்துகொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகளைச் சமாதானம் செய்த அதிகாரிகள், காலை 10 மணிக்கு விமானம் சிங்கப்பூருக்குப் புறப்படும் என்று அறிவித்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி 10 மணிக்கும் விமானம் புறப்படவில்லை.

ஆத்திரமடைந்த பயணிகள் மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யும் பணி நடந்துகொண்டு இருப்பதாகவும் பிற்பகல் 1 மணியளவில் விமானம் புறப்படும் என்றும் அவர்களிடம் அதிகாரிகள் கூறினர்.

பின்னர், ஒருவழியாக பிற்பகல் 1.45 மணிக்கு விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. ஏறக்குறைய 12 மணி நேரம் தாமதமானதால் 168 பயணிகளும் அவதிக்குள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறின.

குறிப்புச் சொற்கள்