வெள்ளிக்கிழமை அதிகாலை, தஞ்சோங் பகார் சாலையில் ஒருவர் வேகமாக காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் காலை 4:35 மணிவாக்கில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
அதிகாரிகளின் உத்தரவை மீறி தொடர்ந்து காரை வேகமாகச் செலுத்தினார் ஓட்டுநர். எனவே காவல்துறையினர் அந்த காரைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அதிகாரிகள் வருவதைக் கண்டு மேலும் வேகமாக காரை ஓட்டிய ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த விளக்குக் கம்பத்தில் மோதினார்.
அதன் பின்னர் காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க காரில் இருந்த ஓட்டுநரும் பயணிகளும் டிராஸ் ஸ்திரீட் நோக்கி ஓடினர்.
அவர்களில் இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக 22 வயதுப் பெண்ணும் 32 வயது ஆணும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
32 வயது ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
விளக்குக் கம்பம் மீது மோதிய கார் சுழன்றதைப் பார்த்ததாகவும், மேலும் காரில் இருந்து மூன்று, நான்கு பேர் அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருக்க வெவ்வேறு திசையில் ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் சின் மின் நாளிதழிடம் கூறினார். ஓட்டுநரையும் மேலும் மூவரையும் அதிகாரிகள் தேடிவருகின்றனர். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

