உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பவர்களைக் காக்கும் விதமாக அவர்களுக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு இடத்தை வழங்க மனநல ஆலோசகர்களும் சமூக சேவையாளர்களும் உதவ உள்ளனர்.
வேறு உதவி கிட்டாதோர் மனநலக் கழகத்தில் சிகிச்சை பெறுவதற்குப் பதில் இதில் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பாதுகாப்பு இடம், 2024ஆம் ஆண்டு அபய ஆலோசனைச் சங்கத்தின் நிதி உதவியாலும் மனநலக் கழகத்தின் ஆதரவாலும் அமைக்கப்படும்.
இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டன.
புதிய திட்டம் மூலம் உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பவர்களைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக பல சமூக சேவை அமைப்புகள் 24 மணிநேரமும் செயல்படுவதில்லை, இந்த புதிய திட்டம் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகர்களை அணுக உதவும். மேலும் அவர்கள் தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடமும் வழங்கப்படும். இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் குறையக்கூடும் என்றார் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான புவா சுன் யாட்.
பாதுகாப்பு இடத்தை எங்கு நிறுவுவது என்பது குறித்துத் திட்டமிட்டு வருவதாக கூறிய திரு புவா, அங்கு நீண்ட நாள் தங்க அனுமதி வழங்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு இடம் தற்காலிக உதவி நிலையமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

