மீண்டும் சேவை வழங்கும் 12 எஸ்ஐஏ ஏ380 ரக விமானங்கள்

1 mins read
723b260e-155c-4c87-b777-57f865c14a27
சிங்கப்பூர் ஏர்லைன்சின் அனைத்து ஏ380 ரக விமானங்களும் இப்போது செயல்பாட்டில் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் 12 ஏ380 ரக விமானங்கள் அனைத்தும் இப்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளன.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு பயணம் மேற்கொள்வதற்கான தேவை மக்களிடையே அதிகரித்திருப்பது இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் 19 ஏ380 ரக விமானங்கள் சேவை வழங்கின. தான் வழங்கும் சேவைகள் குறித்து மறுபரிசீலனை செய்த பிறகு அந்நிறுவனம் அவற்றை 12ஆகக் குறைத்துக்கொண்டது.

அந்த 12 இரு தள விமானங்கள் பின்னர் புதுப்பிக்கப்பட்டன.

9V-SKP என்ற எண்ணைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் 12வது ஏ380 ரக விமானம் டிசம்பர் மாதம் ஏழாம் தேதியன்று மீண்டும் சேவையைத் தொடங்கியது. இத்தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமையன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தியது.

கிட்டத்தட்டமூன்று ஆண்டுகள் ஒன்பது மாத காலத்துக்கு அந்த விமானம் பயணிகள் சேவையை வழங்காதிருந்தது.

ஒவ்வோர் ஏ380 ரக விமானத்திலும் மொத்தம் 471 இருக்கைகள் உள்ளன. ஒரு விமானத்தில் ஆறு சொகுசுக் கூடங்கள் (சுவீட்), 78 பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள், 44 பிரீமியர் இக்கானமி இருக்கைகள், 343 இக்கானமி இருக்கைகள் ஆகியவை உள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் ஏ380 ரக விமானங்கள், ஜம்போ ஜெட் என்றழைக்கப்படும் பெரிய விமானங்கள். கதவு, படுக்கை போன்ற வசதிகளைக் கொண்ட சொகுசுக் கூடங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்சின் அத்தகைய விமானங்களில் மட்டும்தான் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்