தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணியை இன ரீதியில் அவமதித்த வாடகை கார் ஓட்டுநருக்கு $3,000 அபராதம்

2 mins read
7ba1fb60-eee2-4df9-aa94-d6ffd684dd2c
ஓட்டுநர் பே பூன் ஹுவாவிற்கு தங்கள் நிறுவன டாக்சியை ஓட்ட நிரந்தரத் தடை விதித்துள்ளதாக டடா நிறுவனம் கூறியது. - படம்: ஜன் ஹோடென்/ஃபேஸ்புக்

தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் இன ரீதியாக அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியதற்காக $3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 54 வயது பே பூன் ஹுவாவின் காரில், செப்டம்பர் மாதம், 46 வயதுப் பெண் பயணம் செய்தார். பயணியை இறக்கிவிடும் இடம் தொடர்பில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மன அழுத்தத்தை விளைவிக்ககூடிய வகையில் அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பே ஒப்புக்கொண்டதை அடுத்து டிசம்பர் 13ஆம் தேதி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக, துன்புறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண், செப்டம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில், புளோக் 430 பாசிர் ரிஸ் டிரைவிலிருந்து ‘டடா’ செயலி மூலம் தனியார் வாடகை காருக்குப் பதிவுசெய்தார்.

புளோக் 194 பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12க்குச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட நினைத்தார். ஆனால் செயலியில் ஏற்பட்ட கோளாற்றால் புளோக் 194 பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11 என அவர் பதிவிட நேர்ந்தது.

அந்தப் பெண்ணையும் அவரது ஒன்பது வயது மகளையும் ஏற்றிச்சென்ற பே, புளோக் 194 பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11 என்ற இடத்தைக் கண்டுபிடிக்க இயலாததால் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12ஐ நோக்கி காரைத் திருப்பிச் சென்றார். வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் பயணி அதைத் தனது கைப்பேசியில் பதிவு செய்தார்.

உரிய இடத்தில் இறங்கிக்கொண்ட அந்தப் பெண், மறுநாள் காவல்துறையிடம் புகாரளித்தார்.

ஓட்டுநர் பே தங்கள் நிறுவன டாக்சியை ஓட்ட நிரந்தரத் தடை விதித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த டடா நிறுவனம் கூறியது. அவர் இனரீதியில் அவமதிக்கும் சொற்களைக் கூறியது நிறுவனத்தின் கொள்கைகளுக்குப் புறம்பானது என்று அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்