சிங்கப்பூரில் பாதுகாவல் அதிகாரி ஒருவரைத் தாக்கிய ஆஸ்திரேலிய ஆடவருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது காதலருடனும் மகனுடனும் சுற்றுலாவுக்காக சிங்கப்பூர் வந்திருந்த அந்த ஆடவர், தான் தங்கியிருந்த வர்த்தக வீட்டு (செர்விஸ்ட் ரெசிடன்சஸ்) வளாகத்தில் பாதுகாவல் அதிகாரியைத் தாக்கியிருக்கிறார்.
குற்றவாளியான 40 வயது கிரெய்க் கிளைவ் ஹில்டன், தனியார் பாதுகாவல் துறைச் சட்டம் 2007ன்கீழ் வேண்டுமென்றே பாதுகாவல் அதிகாரியைத் தாக்கியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். தாக்கப்பட்ட கேசவன் ராஜேந்திரன் என்ற 25 வயது தனியார் பாதுகாவல் அதிகாரிக்கு இழப்பீடாக 159.62 வெள்ளி வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
அக்டோபர் மாதம் 24ஆம் தேதியன்று ஹில்டன் சிங்கப்பூருக்கு வந்ததாக துணை அரசாங்க வழக்கறிஞர் டேஃப்னி லிம் தெரிவித்தார்.
554 ஹேவ்லாக் சாலையில் இருக்கும் ‘லூயிஸ் கியேன்’ வர்த்தக வீடுகளில் அவர் வசித்திருந்தார். நவம்பர் மாதம் ஆறாம் தேதியன்று ஹில்டனுக்கும் அவரின் காதலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ‘லூயிஸ் கியேன்’ கட்டடத்தில் வேறு அறைக்கு மாறிக்கொண்டார்.
அவர் அன்றிரவு 10.30 மணியளவில் ‘லூயிஸ் கியேன்’ வரவேற்பு முகப்பில் இருந்த திரு கேசவனிடம் தனது காதலர் இருக்குமிடம் குறித்துக் கேட்டிருக்கிறார். திரு கேசவன் அத்தகவலை வெளியிடவில்லை.
மறுநாள் அதிகாலை 3.30 மணியளவில் ஹில்டன் திரும்பி வந்த பிறகும் திரு கேசவன் அத்தகவலைத் தெரிவிக்கவில்லை. தான் பாதுகாவல் அதிகாரி மட்டுமே என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதனையடுத்து ஹில்டன் திரு கேசவனைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஹில்டன் மதுபோதையில் இருந்ததை உணர்ந்த திரு கேசவன், வரவேற்பு முகப்பிலிருந்து வெளியேறி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன, அவரின் கன்னம் சிவந்து உதடுகள் சற்று வீங்கியிருந்தன.
குற்றவாளி ஹில்டனுக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

