பாசிர் ரிஸ் ஸ்திரீட் 72ல் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் 46 வயது ஆடவர் ஒருவரைக் கொல்ல முயற்சி செய்ததாக 61 வயது ஆடவர் ஒருவர் மீது வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசாவில் புதன்கிழமை (டிசம்பர் 20) மாலை 4.50 மணியளவில் திரு வோங் தாய் ஹுவோங், 46, என்பவரை லோ சாய் ஹோ பலமுறை வெட்டுக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், லோ உட்பட நால்வர் காயமடைந்ததாகத் தெரிவித்தது. அவர்கள் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அப்போது லோ ஓரளவு சுயநினைவுடன் இருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மருத்துவமனையில் லோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இச்சம்பவத்தில் தாக்கப்பட்டவர்களுக்கு லோ தெரிந்தவர் என்று காவல்துறை தெரிவித்தது. அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், வியாழக்கிழமை நண்பகல்வாக்கில் அக்கடைத்தொகுதிக்குச் சென்றார்.
பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகே கடைக்காரர்களிடம் நலம் விசாரித்தார்.
வரும் ஜனவரி 11ஆம் தேதி லோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
தொடர்புடைய செய்திகள்
கொலை செய்ய முயன்று காயம் விளைவித்தது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம், அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

