தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு 6 மாதச் சிறை

1 mins read
ef20b8f4-9776-4d5b-a982-31a7b2cada3e
அக்டோபர் 12ஆம் தேதி ஹாக்கின்ஸ் கெவின் பிரான்சிசின் மிரட்டலை அடுத்து ஸ்கூட் விமானம் டிஆர்16 கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்ப நேரிட்டது. - படங்கள்: ஹாக்கின்ஸ் கெவின் பிரான்சிஸ்/ ஃபேஸ்புக், சிங்கப்பூர் ராணுவ விமானப் போக்குவரத்துப் படம்/ஃபேஸ்புக்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானத்திற்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அது சிங்கப்பூர் திரும்பக் காரணமாக இருந்த ஆஸ்திரேலிய ஆடவருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக, பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறை தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவன விதிமுறைகளின்கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஹாக்கின்ஸ் கெவின் பிரான்சிஸ், 30, டிசம்பர் 22ஆம் தேதி பயங்கரவாதச் செயல்கள் மேற்கொள்வதாகப் போலியான மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அக்டோபர் 12ஆம் தேதி, பெர்த்துக்குக் கிளம்பிய ஸ்கூட் விமானம் டிஆர்16, அவரது செயலால், கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிங்கப்பூருக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சாங்கி விமான நிலையம் வந்தடைந்த அவ்விமானத்தின் பாதுகாப்பிற்காக சிங்கப்பூர் ஆகாயப் படையின் இரண்டு எஃப்-15எஸ்ஜி போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.

புக்கெட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக பெர்த்துக்குத் தன் மனைவியுடன் பயணம் செய்த ஃபிரான்சிஸ், பெர்த்தில் விமானம் தரையிறங்கிய பிறகு தன்னைக் கைது செய்யும்படி வேண்டியதாகக் கூறப்பட்டது.

ஃபிரான்சிஸ், ‘ஸ்கிட்சஃப்‌ரீனியா’ எனப்படும் மனப்பிறழ்வு, மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர் என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் கிரேஸ் சுவா தெரிவித்தார்.

போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு அவருக்கு, $500,000 வரையிலான அபராதமோ பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்