மாணவர்களுக்கு பல்வேறு கல்வி வாய்ப்புகளையும் தொழில்துறையில் பணியாற்றத் தேவையான திறன்களை வளர்க்கும் புதிய படிப்புகள் குறித்தும் அறிமுகம் செய்யும் நோக்கில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பொது வரவேற்பு தினத்தை நடத்த உள்ளது.
தகவல் தொடர்பு ஊடகத் துறை, இயந்திர மின்னணுவியல், எந்திரனியல், இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கத் தடயவியல், படைப்பாற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவு, மருத்துவத் துறைப் புத்தாக்கம் என தற்போதுள்ள பணிச்சூழலில் வாய்ப்புகள் அதிகரித்துவரும் துறைகளுக்கான திறன்களை வளர்க்கும் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி.
2024 ஆம் ஆண்டு, ஜனவரி 4 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பொது வரவேற்பில் மாணவர்கள் இலவசமாகக் கலந்துகொண்டு, தங்களுக்கு விருப்பமான துறை குறித்த தகவல்கள், படிப்புகளில் சேர்வதற்கான வழிமுறைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உபகாரச் சம்பளங்கள், உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கான தீர்வுகள் என அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வளர்க்கும் புதிய கல்விப் பிரிவுகள்
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொறியியல் துறை, அறிவார்ந்த எரிசக்தி மேலாண்மைத் தொழில்நுட்ப மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த ஆய்வகம் நகர்ப்புறச் சூழலில் தானியக்க வாகனங்களை இயக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நிலையான எரிசக்தித் தீர்வுகளை ஆராய்கிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நகர்ப்புற நகர்வுத் திட்டங்களில் பணியாற்ற விழையும் மாணவர்களுக்கான திறன்களை வளர்க்க, இக்கல்லுரியின் மின்பொறியியல் துறை, இயந்திர மின்னணுவியல் மற்றும் எந்திரனியல் தொடர்பான படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
இது, சூரியசக்தி மின்சாரம், ஒளிமின்னழுத்த அமைப்புகள், பசுமை ஆற்றல் பயன்பாடு என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவின் மூலம் புதுமையான வழிகளைக் கண்டறிய மாணவர்களை ஊக்குவிக்கிறது.
மூ-பஸ் போன்ற தானியக்க வாகனங்களுக்கான ஜிபிஎஸ் தொழில்நுட்பம், பாதையைக் கண்காணிக்கும் தரவுகளை மேம்படுத்துதல் குறித்து ஆராயவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
தகவல்தொடர்பு ஊடகத் துறை, மாணவர்களுக்கு மின்னிலக்கத் தடயவியல் குறித்த படிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, இணைய அச்சுறுத்தலுக்கு எதிரான மீள்திறன் மேம்பாட்டுக்குப் பங்களிக்க வாய்ப்பு கிட்டும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் இத்துறை, தரவு அறிவியல் கல்வியையும் வரும் ஏப்ரல் 2024ல் அறிமுகம் செய்கிறது. தொழில் வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றுவதோடு, ஓராண்டு வேலைப் பயிற்சி அனுபவமும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இவை தவிர, பொதுவான உடல்நலனை மேம்படுத்தும் வகையில், நோய்களை விரைவில் கண்டறிவது, தரவுகள் அடிப்படையில் சுகாதாரச் சேவைகளை நோயாளிகளை மையமாகக் கொண்டதாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்த கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘பீ யுவர் ஓன் பாஸ்’ எனும் தலைப்பில் தொழில்முனைப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான போட்டியும் நடத்தப்படுகிறது.
உணவுத் துறையில் தங்களது புதுமையான யோசனைகளை சமர்ப்பித்து வெற்றி பெறும் மாணவர்கள், நீ ஆன் கல்லூரியின் ‘கிக்ஸ்டார்ட்’ நிதியிலிருந்து 5,000 வெள்ளி வரை மானியம் பெறுவதோடு, வளாகத்திற்குள் உணவங்காடி அமைப்பதற்கான இடத்தையும் பெறுவர்.