சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோய் அதன் உச்சத்தில் இருந்தபோது சிங்கப்பூரின் 2,300க்கும் அதிகமான அறப்பணி அமைப்புகள் திரட்டிய ஒட்டுமொத்த நன்கொடைத் தொகை $2.95 பில்லியன்.
இதன்படி 2020ன் நிதியாண்டில் பதிவான $3.12 பில்லியனைக் காட்டிலும் 2021ன் நிதியாண்டில் பதிவான நன்கொடை ஏறத்தாழ 5% குறைந்திருந்ததாக டிசம்பர் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறநிறுவனங்கள் ஆணையாளரின் (சிஓசி) 2022 வருடாந்தர அறிக்கை தெரிவித்திருந்தது.
சமூக, சுகாதாரப் பிரிவுகளில் மட்டும் 2021 நிதியாண்டில் நன்கொடை அதிகரித்திருந்தது. சமயம், கல்வி, கலைகள் மரபுடைமை ஆகிய பிரிவுகளில் நன்கொடை சரிந்திருந்தது.
அறநிறுவனங்கள் 2021ஆம் ஆண்டுடன் முடிவடைந்த தங்களின் வருடாந்தர நிதியாண்டு கணக்குகளைச் சமர்ப்பித்திருந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த அண்மைய தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாக சிஓசி டெஸ்மண்ட் சின் குறிப்பிட்டார்.
அறப்பணி அமைப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி 2,379 என்றும் அவற்றில் தேவாலயங்கள், கோவில்கள் போன்ற சமயக் குழுக்கள் 45% என்றும் அறியப்படுகிறது.
சமயம், சமூகம், சமூகநலம் ஆகிய பிரிவுகளில் உள்ள அறப்பணி அமைப்புகளுக்கு $1.67 பில்லியன் நன்கொடை வழங்கப்பட்டது. இதன்படி 2021 நிதியாண்டில் நன்கொடைப் பிரிவுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த நன்கொடையில் பாதிக்கு மேல் சமயம், சமூகம், சமூகநலம் சார்ந்த அறநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நன்கொடைப் பிரிவினரின் செயல்பாடுகளுக்கும் நிதித் திரட்டு நடவடிக்கைகளுக்கும் கொவிட்-19 கொள்ளைநோய் இடர்ப்பாடாக இருந்ததால் மொத்த நன்கொடைத் தொகை குறைந்ததாக திரு சின் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, நிதித் திரட்டு தொடர்பான இயக்கங்கள் சட்டபூர்வமானவையா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த அறப்பணி இணையவாசலை (Charity Portal) மக்கள் நாடித் தேடுதல் மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்

